பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

332

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

போன்ற பேரரசர்க்கு ஏற்றதன்று! பகைவர் இதனைத் தங்கள் பலவீனமாக எண்ணி ஏதேனும் செய்யமுற்படுவர்” என்று பலமுறை கூறிய அறிவுரையையே அப்போதும் வயந்தகன் அவனுக்கு ஆறுதலாகக் கூறினான். வயந்தன் கூறிய இந்த ஆறுதல் மொழிகளைக் கேட்ட உதயணன், தத்தை சற்று நேரத்திற்குமுன் தன் பள்ளியறைக்கு வந்தது, தன்னருகில் அமர்ந்து கோடபதியை வாசித்தது, அவளது எண்ணெய் காணாது மாசுண்ட கூந்தலைத் தான் அன்போடு தன் கைகளால் தீவியது முதலிய யாவற்றையும் சோக உணர்ச்சி யும் ஆர்வமும் தொனிக்கும் குரலில் உதயணன் கூறினான். ஆனால், வயந்தகனோ சிரித்துக்கொண்டே அவனுக்குப் பதில் கூறினான். “கனவிலே கண்ட பொருளை நனவிலே அடைய வேண்டும் என்று தேவர்களே ஆசைப்பட்டாலும் முடியாதே! உன் வார்த்தையைக் கற்றவர்கள் கேட்டால் நகைப்பார்கள்! ஒன்று வேண்டுமானால் நடந்திருக்கும். ஆடலும் பாடலும் புன்னகையும் கொண்டு வாசவதத்தையைப் போன்ற உருவத்துடனேயே இங்கே அரண்மனையில் ஓர் இயக்கி உலாவி வருகின்றாள். அவள் மாயா வடிவமுடையாள். அவளே உங்கள் கனவில் வாசவதத்தை போலத் தோன்றி, உங்களை ஏமாற்றியிருக்க வேண்டும்! இனி அந்த மாயவடிவின் நடமாட்டம் நிகழாதபடி மந்திரங்களைக் கொண்டு பரிகாரம் புரிந்து காக்க ஏற்பாடு செய்துவிடுகின்றேன்” என்று தான் ஒன்றையும் அறியாதவன்போல் ஒரு பொய்யைத் துணிந்து கூறினான் வயந்தகன்.

ஆயினும் வயந்தகன் கூறியபடி அது ‘கனவாக இருந்து விடக்கூடாதே!’ என்று கலங்கியது உதயணன் நெஞ்சம். ‘புண்ணியப் பயனாக அது நனவிலேயே நிகழ்ந்துவிடலாகாதா?’ என ஏங்கினான் அவன். மறுநாள்பொழுது புலர்ந்ததும் ‘கனவாகவே இருப்பினும் அது நல்விளைவைத் தருதல் வேண்டும்’ என்ற கருத்துடன் பலவகை அறங்களை விரும்பிச் செய்தான். குளம்புகளிலும் கொம்புகளிலும் பொன் தகடுகளைப் பதித்து, ஒளிமயமான புதிய ஆடை