பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

334

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

வியப்புக்கொள்ளவும் செய்ய வேண்டும்’ என்றே யாரோ ஒரு முனிவர் வந்திருப்பதாக ஒரு பொய்யைக் கூறினான். வயந்தகனும் உதயணனும் வேகமாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தேர் ஒன்றில் மதுகாம்பீர வனத்தை நோக்கிப் புறப்பட்டனர். விரைவில் ஊரெல்லையிலிருந்த அந்த வனத்தை அடைந்தது அவர்கள் தேர். உதயணனை அழைத்து வரப் போகின்ற செய்தியை யூகிக்கு ஏற்கெனவே புலப்படுத்தி விட்டு, தத்தையும் அவனும் உதயணனைச் சந்திக்க ஏற்றவாறு இருக்கும்படி முன்பே கூறிவிட்டுச் சென்றிருந்தான் வயந்தகன். யூகியின் தோற்றம், அவன் அப்போதிருந்த நிலை யாவும் மிகவும் துயரத்திற்கு உரியனவாக இருந்தன. பல நாள்களாக எண்ணெய் பூசிப் பேணப்படாமையினால் சடை படர்ந்து பிடரியில் தொங்கும் குஞ்சி! பாவத்துடனே போராடி வென்ற ஆண்மையைப் போன்று ஒருவிதமான புனித நிலையின் சாயல் மட்டுமே புலப்படும் ஒடுங்கிய தோற்றம்! காவி நிறத்து ஆடைகள்! ‘இரவு நேரத்தில் உண்பதில்லை’ என்ற விரதத்தைக் கொண்டிருந்ததனால், இளைத்திருந்த உடல்! அதுவரை அவனுடைய சிந்தையில் இருந்தது ஒரே ஒர் எண்ணம்தான். ‘உதயணன் நல்லபடி தன் அரசைப் பெற்று நீடுழி காலம் வாழ வேண்டும்’ என்பதுதான் அந்த எண்ணம்! அதுவும் நிறைவேறிவிட்டது.

63. பதுமையின் பெருந்தன்மை

வாசவதத்தையின் தோற்றத்திலும் நீண்ட பிரிவுத் துயரமே தென்பட்டது. உடல் முழுவதும் பொன்னிறப் பசலை போர்த்திருந்தது அவளுக்கு. ஒளி வறண்ட நெற்றி, செழிப்புக் குறைந்து ஒடுங்கிய உடல் என்று இவ்வாறு இருந்த இந்த நிலையிலும், கணவனை நலமுறச் செய்வதற்காகத் தான் தனிமை வாழ்வை மேற்கொண்ட தியாகத்தின் ஒளியும் கற்பின் உறுதியும் அவள் முகத்தில் நன்றாகப் பிரதிபலித்தன. ‘உதயணனை அழைத்துக்கொண்டு வயந்தகன் வரப் போகின்றான் என்பதை அறிந்த உடனேயே, யூகியும்