பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதுமையின் பெருந்தன்மை

337

அரிய பெரிய உதவிகளை எல்லாம் செய்துள்ளீர்கள்! உங்கள் உதவியின் அளவு ஆலம் வித்துப்போலச் சிறியதாக இருந்தாலும், அவற்றால் தோன்றி விளைந்து பல படர்ந்த நன்மைகள் ஏற்பட்டுள்ளன. அந்த நன்றியை நான் என்றுமே மறக்க மாட்டேன்” என்று சாங்கியத்தாய்க்கு நன்றி செலுத்தினான். பின் மீண்டும் தத்தையைக் கூர்ந்து நோக்கிய அவன், முதல் நாளிரவு தன் பள்ளியறையில் கண்டது போலவே அவள் தோற்றும் இப்போதும் இருந்ததைக் கண்டு வயந்தகனைக் கூப்பிட்டுக் கேட்டான். வயந்தகன் உண்மையாக நிகழ்ந்தவற்றை எல்லாம் அவனிடம் கூறிவிட்டான். சற்றைக்கெல்லாம் யாவரும் தேரேறி அரண்மனைக்குப் புறப்பட்டுச் சென்றனர். தேரில் செல்லும்போது எல்லார் மனத்திலும் மகிழ்ச்சியே நிரம்பியிருந்தது.

‘இறந்து போனார்கள்’ என்றெண்ணியிருந்த வாசவதத்தை, யூகி, சாங்கியத் தாய் ஆகிய மூவரையும் தேரில் ஏற்றிக்கொண்டு வயந்தகனும் உதயணனும் வருவதைக் கண்ட கோசாம்பி நகர மக்கள் மட்டிலா மகிழ்ச்சி கொண்டனர். தேர் சென்ற வீதிகளில் எல்லாம் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி இந்தக் காட்சியைக் கண்டனர். ‘பிரிந்தவர் கூடினோம்’ என்ற மகிழ்ச்சியுடனே யாவரும் கோசாம்பி நகரத்து அரண்மனையை வந்தடைந்தனர். ‘யூகிக்குத் தன் நன்றியைத் திரும்பத் திரும்பச் சொல்லவேண்டும்’ என்பது போன்ற ஆசை உதயணனுக்கு அப்போது அடிக்கடி ஏற்பட்டது. ஆனால், ‘அடிக்கடி ஒருவருக்கு நன்றியைக் கூறுவதும் நட்பிற்கு ஏற்றது அல்லவே’ என்றெண்ணித் தன் ஆசையை அடக்கிக் கொண்டான். சாங்கியத் தாயை மட்டும் இரண்டு மூன்று முறை மீண்டும் பாராட்டுக் கூறி நன்றி செலுத்தினான். பதுமாபதியின் அந்தப்புரத்திற்கு ஆளனுப்பி, ‘உன் தமக்கை முறையுடையவளாகிய வாசவதத்தை இன்று வந்திருக்கிறாள்! நீ வந்து அவளைக் காண்க’ என்று அவளுக்குச் செய்தி அறிவிக்கச் செய்திருந்தான்.

செய்தியறிந்த பதுமை, ‘வாசவதத்தை வந்துவிட்டாளே!’ என்று சிறிதேனும் பொறாமை அடையவில்லை. பெருந்

வெ.மு- 22