பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

யர் சேரிக்குச் சென்ற அவன் நருமதையைச் சூழ்ச்சியிற் சிக்கவைப்பதற்காக ஒரு பொய்க் கதையைக் கட்டிவிட்டான். ‘அன்றொரு நாள் உதயணன் யானையின் மதத்தை அடக்கி விட்டு வீதிவழியாக வரும்போது, அவனை எதிர்ப்பட்டு அவன்மேல் அளவிலா வேட்கை கொண்டரற்றும் நருமதையின் வீடு யாது?’ என்று அந்தக் கற்பனைச் சரட்டுடன் அவள் வீட்டை அறிந்து கொள்ளும் வினாவையும் முடித்துவிட்டான். அந்த வினாவால் அங்குள்ளவர்களிடம் அவளுடைய வீட்டை அறிந்துகொண்டு நூற்றொரு பொன் மாசைகளை எடுத்துக்கொண்டு (மாசை-ஒருவகை நாணயம்) அவள் வீட்டினுள் நுழைந்தான். இவ்வாறு நுழைந்த வயந்தகனை நருமதையின் நற்றாய் வரவேற்று உபசரித்து, இருக்கையில் அமரச்செய்தாள். வயந்தகன் வந்த காரியத்தை அவளிடம் கூறினான். அவள் அதற்காக மிகவும் மகிழ்ந்தாள்.

6. நருமதையின் மறுப்பு

யந்தகன் கூறியதைக் கேட்ட நருமதையின் நற்றாய், "உதயணன் மனத்துள் என் மகள் விரும்பப் பெற்றாள் என்றால் அது எங்களுக்கு மிகச் சிறந்த பேறாகும். அதனால் நாங்கள் பெருமைப்பட வேண்டும்" என்று உதயணனைப் பிணித்தற்குரிய மொழிகளைத் தூண்டில் நுனியில் இரைகோத்து அதனால் மீனைப் பிடிப்பதைப்போலக் கருதிக் கூறினாள். உதயணன் இவ்வாறு தங்களுக்குப் பெருமை கொடுத்தும் தங்கள் வீடுதேடி வராதது ஒரு சிறு குறை என்ற கருத்தும் அவளுக்குச் சிறிதுண்டு. இவர்கள் இவ்வாறு இங்கே உரையாடிக் கொண்டிருக்கும்போது நருமதையும் உள்ளிருந்து வந்து சேர்ந்தாள். உடனே நருமதையின் தாய் அவளுக்கு உதயணன் பெருமைகளை எடுத்துரைக்கலாயினள். "பரத்தையர் ஒழுக்கத்தை நினைத்தும் அறியாதவன் அவன். இழுக்கற்ற தூய வாழ்க்கையை உடையவன். சூது முதலியவைகளைக் கனவிலும் நினைப்பது இல்லாதவன். கொடையுள்ளம் படைத்தவன். அப்படிப்பட்டவன் உன்னை விரும்புகிறான்