பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

340

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

மகிழ்ந்து இருத்தல் வேண்டும்! இது அடியாள் தங்களிடம் வேண்டிக்கொள்ளும் வரம்! யான் என் அந்தப்புரத்திற்குச் செல்லுகின்றேன். நீங்களிருவரும் அன்புடன் எனக்கு விடையளிக்கவேண்டும்” என வேண்டிக்கொண்டாள். அவளுடைய மாசற்ற அன்பு உள்ளத்தைக் கண்டு உதயணனுக்கு மனம் நெகிழ்ந்தது. பதுமை மீண்டும் இருவரையும் வணங்கி விட்டுச் சென்றாள்.

64. பிரச்சோதனன் தூது

துமாபதி சென்றபின் வாசவதத்தையிடம் அவளுடைய குணங்களைப் பலவாறு பாராட்டிக் கூறினான் உதயணன். ‘குணத்திலும் அழகிலும் பதுமை உன்னைப் போலவே இருக்கிறாள் என்பதற்காக நான் அவளை மணந்து கொண்டேன்’ என்றும், மேலும் பலவிதத்திலும் பதுமையைப் பற்றி உதயணன் தன்னிடத்தில் புகழ்ந்து கூறவும் அதுவரை பொறாமை என்பதையே நினையாமலிருந்த வாசவதத்தைக்கும் மெல்லமெல்லப் பொறமை ஏற்பட்டுவிட்டது. பதுமையை அவன் தன்னோடு ஒப்பிட்டுப் பாராட்டியதை அவளால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. தத்தையின் கண் இமைகள் சிவந்தன; உதடுகள் துடித்தன; முகத்தில் கடுமை பரவியது. வெடுக்கென்று உதயணனைச் சுட்டுவிடுபவளைப்போலத் திரும்பிப் பார்த்தாள் அவள். வாசவதத்தை சினங்கொண்டிருக்கிறாள் என்பதை அவனறிந்து கொண்டான். பேச்சை மாற்றிப் பல வகை உபாயங்களினாலே அவள் சினத்தைத் தணிக்க முயன்றான் அவன். ஆனால், அவை யாவும் அவள் சினத்தைப் பெருக்குவதற்குத்தான் பயன்பட்டனவே தவிர, சிறிதளவும் குறையச் செய்யவில்லை. இறுதியாக, “மற்ற விதங்களில் பதுமை உன்னை ஒத்திருப்பினும் உன் பெண்மைக்கு நிகர் நீயேதான்” என்று கூறிய பின்பே உதயணனால் அவளுடைய சினத்தை ஒருவாறு தணியச் செய்ய முடிந்தது.