பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிரச்சோதனன் தூது

341

வாசவதத்தை வந்து சில தினங்களான பின்னால், கோசாம்பி நகரத்து அரண்மனையில் ஒரு பெரிய பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தான் உதயணன். பிரிந்து ஒன்றுகூடிய தன் நண்பர்களை எல்லாம் பாராட்டித் தான் செலுத்த வேண்டிய நன்றியைச் செலுத்திவிட வேண்டும் என்பதே அவன் நோக்கம். யூகியையும் வாசவதத்தையையும் தான் திரும்பப் பெற்றுவிட்ட மகிழ்ச்சியோடு அந்த விழாவும் சிறப்புற நிகழவேண்டும் என்று அவன் ஆசையுற்றதனாலேயே, ஏற்பாடுகளை உடனே செய்யுமாறு தன் சேனாபதிகளுக்கு ஆணையிட்டிருந்தான். விழாவன்று கோலாகலமாகக் காட்சியளித்தது அரண்மனை. அரசவையில் ஐம்பெருங் குழுவினரும் எண் பேராயத்தினரும் அமைச்சர்களும், மிகப் பெரிய செல்வர்களும் நெருங்கி நிறைந்து கூடியிருந்தனர்.

உருமண்ணுமாவை அழைத்து அன்றிலிருந்து தன்னுடைய பிரதம சேனாபதியாக அவனை நியமித்திருப்பதாக அறிவித்தான் உதயணன். பன்னூறாயிரம் பொன்னுக்குக் குறைவில்லாத வருவாய்களை உடைய ஊர்களையும் உயரிய பாதுகாப்புப் படைகளையும் அவன் வசம் ஒப்புவித்தான். பதுமைக்கு நெருங்கிய தோழியும் அழகிற் சிறந்த இளங்கன்னியுமான இராசனை என்பவளை உருமண்ணுவா மணந்துகொள்வதற்கு ஏற்ற மங்கலத் திருநாளையும் ஏற்பாடு செய்தான். பாராட்டுத் திருவிழாவிற்கு இடையே மங்கலமான ஒரு நாளில் உருமண்ணுவாவுக்கும் இராசனைக்கும் திருமணம் நடந்தேறியது. பின் இலாவாண நகரம், சயந்தி நகரம், இரண்டையும் பிரதம சேனாபதியாகிய அவன் ஆண்டு வருமாறு கூறித் தான் அழைக்கும்போது மட்டும் தலைநகருக்கு வந்து தங்கினால் போதுமென்று ஆணையிட்டான் உதயணன். கணவனும் மனைவியுமாக அவர்களிருவரும் இலாவாணத்திலுள்ள பெற்றோரைப் பேண வேண்டுமென்று கூறி அவர்களை வாழ்த்தி வழி அனுப்பினான். விடைபெற்ற பின் உருமண்ணுவாவும் புதிய பதவியுடனும், புதிய மனைவியுடனும் கோசாம்பியில் யாவரிடமும் சொல்லிக் கொண்டு இலாவாண நகரத்திலுள்ள தன் பெற்றோரைக் கண்டு ஆசி