பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யூகியின் புறப்பாடு

345

னாலேயே ஏதாயினும் செய்ய வேண்டும் என்று யான் கருதத் தலைப்பட்டேன். அதன் விளைவுதான் காட்டிற்கு எந்திரயானையை அனுப்பித்து உன்னைத் தந்திரமாகச் சிறைப்பிடித்து வரச் செய்தது. இது என்றோ நடந்து கழிந்து போய்விட்டது என்றாலும் இதற்காக இன்று நான் உன்னிடம் மன்னிக்கும்படி வேண்டுகிறேன்! நீ இன்று இனிமேல் என்னை உன் தந்தை முறையுள்ளவனைப் போலக் கருதுதல் வேண்டும். சென்றதை மறந்துவிடு! இனிமேல், பழம் பகையைக் கருதாதே! வாசவதத்தையின் நற்றாயும் நானும் உங்கள் இருவரையும் மணக்கோலத்தோடு ஒருங்கே காண வேண்டும் என்ற ஒரே ஆசையால் தவித்துக் கொண்டிருக்கின்றோம். தத்தையோடு ஒருமுறை இங்கே வந்து நீ எங்களுடைய இந்த ஆசையைப் பூர்த்தி செய்யலாகாதா? நிற்க, மகத வேந்தன் தருசகனின் உதவியால் ஆருணியை வென்று பாஞ்சாலர் ஆதிக்கம் நீக்கிக் கோசாம்பியை நீ மீண்டும் அடைந்த நற்செய்தியைக் கேள்வியுற்று மகிழ்ந்தேன். ஆருணியை வென்று கோசாம்பி நாட்டை உனக்கு மீட்டுக் கொடுத்திருக்க வேண்டிய செயலை நானே செய்யக் கருதியிருந்தேன். நீயாகவே மகத மன்னன் உதவியினாலே அதை அடைந்துவிட்டாய். நல்லது. குழந்தையைப் பேணும் பெற்றோர்களே போலக் குடிமக்களை அன்போடும் பண்போடும் நீ ஆண்டு வருக. யூகி என்ற உனது அரும் பெறல் அமைச்சனைப் பற்றிக் கேள்வியுற்றேன். அவனுடைய அற்புதமான சாமர்த்தியமும் குணநலன்களும் என்னை வியப்படையச் செய்கின்றன. அந்தத் திறமை மிக்க மனிதனை நான் உடனே காணவேண்டும்போல ஆவலாயிருக்கிறது எனக்கு. இந்தத் திருமுகம் கண்டவுடனே யூகியை நீ அன்புடன் இங்கே, உஞ்சை நகரத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அந்த மாபெரும் தீரனைப் பாராட்டுவதற்காக அவந்தி நாட்டு அரசவை மனமுவந்து இப்போதே அவனை எதிர்பார்க்கிறது. இதுவரை எழுதியவை யாவும் நான் உனக்கு உள்ளன்போடு உண்மைக்குப் புறம்பின்றி எழுதியவை. தவறாக இதில் எதுவுமே எண்ணிக் கொள்ள வேண்டாம்'