பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

என்று இவ்வாறு துது வந்த பதுமை, உதயணனிடம் அளித்த அந்தத் திருமுகத்தில் எழுதியிருந்தது.

திருமுகத்தைப் படித்து முடித்த உதயணன் புன்முறுவல் பூத்தான். அவன் மனத்தில் களிப்பு நிறைந்தது. ஆயினும் கடிதத்தில் ஒரே ஒரு செய்தியைப் பற்றி, ‘அது விசாரிக்கத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாக இருந்தும்கூடப் பிரச்சோதன மன்னன் அதை ஏன் விசாரிக்கவில்லை’ என்ற சந்தேகம் உதயணனுக்கு ஏற்பட்டது. துதியாக வந்திருக்கும் பதுமை என்ற அந்தப் பெண்ணிடமே அதனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றெண்ணினான் அவன். “வாசதத்தை இலாவாண நகரத்து அரண்மனையில் தீப்பட்டு இறந்து போனதாக ஒரு செய்தி எங்கும் பரவியதே! அந்தச் செய்தி பொய் என்றிருப்பினும் தத்தையின் தந்தையாகிய தங்கள் அரசர் அதைப்பற்றி இத்திருமுகத்தில் ஒன்றுமே விசாரிக்கவில்லையே! ஏன்?” என்று உதயணன் பதுமை என்ற துரதியை நோக்கி வினாவினான்.

“வேந்தே! வாசவதத்தை தீயிலகப்பட்டு இறந்து போனதாகப் பரவிய செய்தி எங்கள் பிரச்சோதன மன்னருக்கும் தெரியும். அந்தச் செய்தியைக் கேள்வியுற்ற அவர் துடிதுடித்துப் போய்த் தமக்குத் தெரிந்த வரும் நெருங்கிய நண்பருமாகிய ஆற்றல் மிக்க முனிவர் ஒருவரிடம் சென்று, உண்மையைக் கூறுமாறு பிரலாபித்தார். ஞான திருஷ்டியும் தீர்க்க தரிசன உணர்ச்சியும் மிக்க அந்த முனிவர். அரசே தத்தை உண்மையில் தீயிலகப்பட்டு இறக்கவில்லை. உதயணனது நன்மையின் நிமித்தம் அவள் மறைந்து வாழ்கின்றாள். குறிப்பிட்ட நாள்கள் கழித்து அவள் வெளிப்படுவாள். நீ கவலை தவிர்க்க’ எனத் தொடுத்த மாலையைக் கையால் எடுத்தளித்ததுபோல உண்மையைத் தெளிவாகக் கூறி, எம் அரசன் மனந்தேறுமாறு செய்தவிட்டார். இதனாலேயே இச் செய்தி இத் திருமுகத்தில் குறிக்கப் பெறவில்லை” என்று பதுமை மறுமொழி கூறினாள். உதயணனுக்குச் சந்தேகம் நீங்கியது. பின்பு பிரச்சோதன மன்னன் தனக்கும் வாசவதத்தைக்கும் அனுப்பியிருந்த பரிசில் பொருள்களை எல்லாம் வரிசை வரிசையாக