பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

348

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

செய்யவேண்டும்” என்ற செய்தியை எழுதிய திருமுகம் ஒன்றைப் பிரச்சோதனனுக்கு உதயணன் அனுப்பி வைத்திருந்தான். எனவே, யூகி புறப்படும்பொழுது விவரமான திருமுகம் ஏதும் அவனிடம் எழுதிக் கொடுக்கவில்லை. எனினும் வாய் மொழியாகச் சில செய்திகளைப் பிரச்சோதனனுக்குக் கூறி அனுப்பினான். அச்செய்திகள் யாவுமே இரு நாட்டிற்கும் இடையேயுள்ள ஒற்றுமையைப் பலப்படுத்துவனவாயும் இரு அரசர்களுக்கும் இடையேயுள்ள உறவு முறையின் நெருக்கத்தை வன்மையடையச் செய்வனவாகவுமே இருந்தன. யூகியினது உஞ்சை நகரப் பிரயாணம் இரு நாட்டுக்கு இடையிலும் இத்தகையதோர் நல்லுறவை ஏற்படுத்த வேண்டுமென்பதே உதயணன் நோக்கம்.

பிரச்சோதன மன்னனுக்கும், வாசவதத்தையின் நற்றாய், செவிலித்தாய் முதலியவர்களுக்கும், அரச குமாரர்களாகிய கோபாலகன், பால குமாரன் ஆகியோர்க்கும் வேண்டிய அளவு சிறப்பும் பெருமையும் பொருந்திய பரிசில்களை யூகியின் மூலம் உதயணன் கொடுத்தனுப்பினான். தன் நாட்டிலுள்ள அயிராபதம் என்ற மலையிற் கிடைக்கும் சிங்கச்சுவணம் என்னும் பெயரையுடைய தூய பொன்னாற் செய்த அணிகலன்களையும், காந்தார நாட்டிற்றோன்றிய சாதிக் குதிரைகள் நாலாயிரத்தையும், மற்றும் பலவற்றையும் பிரச்சோதனனுக்காக யூகி உஞ்சை நாட்டுக்குப் புறப்படும் பொழுது கொண்டு சென்றான். இவை தவிரத் தத்தையின் தாயார், பிரச்சோதனனின் அரசிளங்குமரர், சிவேதன் ஆகியோர்க்கென அனுப்பிய வேறு பல பரிசிற் பொருள்களும் யூகியைப் பின்பற்றிப் பிற ஊழியர்களால் கொண்டு செல்லப்பட்டன. யூகியோடு கூடப் பிரச்சோதனனுடைய தூதுவர்களாகிய பதுமை முதலியோர் சென்றாலும், தன் அரண்மனையைச் சேர்ந்த விண்ணுத்தராயன் என்ற மிகப்பெரிய வீரனை யூகிக்கு மெய்க்காப்பாளனாகச் செல்லுமாறு ஏவினான் உதயணன். கோசாம்பி நகரத்து அரண்மனையைச் சேர்ந்த தேர்களில் எல்லாம் சிறந்த தேராகிய வையாக்கிரம் என்னும் சிறந்த தேரை யூகியின் பிரயாணத்திற்குப் பயன்