பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கட்சி பிரித்துக்கொண்டு, அவர்கள் தங்களுக்குள் போட்டியிட்டு விளையாடும் அந்த விளையாடல், பார்க்கச் சுவை நிறைந்த காட்சியாக இருக்கும் என்றும் உதயணன் அவசியம் அதனைக் காணவேண்டும் என்றும் வயந்தகன் ஆசையைக் கிளப்பிவிட்டு விட்டான். உதயணன் அந்தப் பந்தாட்டத்தைக் காண்பதற்குத் தீர்மானித்தபோது ஒரு தடையும் எழுந்தது. ‘அவன் விளையாட்டைக் காண்பதற்கு வரப் போகிறான்’ என்பதை அறிந்தாலே அந்தப் பெண்கள் அச்சமும் நாணமும் கொண்டு ஓடிவிடுவர். இதனால் ஒரு பெண்ணைப் போலவே மாறுவேடங் கொண்டு, அவர்கள் விளையாடும் இடத்திற்குச் சற்றுத் தள்ளி ஒரு பெண்யானையில் அமர்ந்தவாறே அதனைக் காண்பது என்ற யோசனையை வயந்தகன், உதயணனுக்குக் கூறினான்.

உதயணனும் தத்தை-பதுமை பந்தாடலைக் காண்பதற்காகப் பெண்ணாக மாறுவேடம் பூண்டான். பெண்கள் கூட்டத்திற்கு நடுவே பெண்ணாகக் கலந்து பழகி நடிப்பதற்கு அவன் மிகுந்த பழக்கமும் முன்னெச்சரிக்கையும் கொள்ள வேண்டியிருந்தது. தோழிகளும் நாட்டிய மகளிருமாக நூற்றுக்கணக்கான பெண்கள் சூழ இருந்தனர். பதுமையும் தத்தையும் ஆட்டத்திற்கு இருபுறங்களிலும் முறையே தலைமை வகித்தனர். உதயணன் ஓர் உயரிய பெண் யானையின்மேல் ‘பெண்ணாக’ வீற்றிருந்தான். ஆட்டம் தொடங்கியது. அவர்கள் விளையாடுவதற்குப் பயன்படுத்திய பந்துகள் நெட்டியினாலும், பஞ்சினாலும், உலண்டு உன்னும் ஒருவகைப்பட்டு நூலாலும் செய்யப்பட்டிருந்தன. மயிற்பீலி, பட்டுக் கயிறு, பாம்பின் மெல்லிய தோல் முதலிய பல்வேறு வகைப் பொருள்களால் அவை புனையப் பெற்றிருந்தன. அப் பந்துகள் யாவுமே பெண்கள் கைப்பற்றி விளையாடுவதற்கு ஏற்ற மென்மையும் நளினமும் பொருந்தி விளங்கின.

முதல் முதலாக இராசனை என்னும் பெண் விளையாட்டைத் தொடங்கி வைத்தாள். சிலம்புகள் குலுங்கக் கை வளைகள் கலகல என்று கீதம் செய்ய, அவள்