பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பந்தாடிய சுந்தரிகள்

351

பந்தைப் பாய்ந்து பாய்ந்து ஆடிய காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது. இடை விடாது ஆயிரம் எண்ணிக்கைவரை அவள் சோர்வு இல்லாமல் பந்தை அடித்துவிட்டு நீங்கியதும், வாசவதத்தையின் உயிர்த்தோழியாகிய காஞ்சனமாலை என்பவள் தொடர்ந்து ஆடினாள். பந்தாடுவதிலுள்ள சில சாதுரியமான முறைகளைக் கடைப்பிடித்து ஆடியதனால் அவளால் ஆயிரத்து ஐந்நூறு எண்ணிக்கைவரை ஆட முடிந்தது. காஞ்சனமாலைக்குப் பின்பு விளையாடிய பதுமையின் தோழியாகிய அயிராபதி, அரிய முயற்சியின் பேரில் ஈராயிரம் எண்ணிக்கைவரை பந்தடித்துக் காண்போரை வியக்கச் செய்தாள். அயிராபதி இவ்வாறு அற்புதமான சாமர்த்தியத்தோடு விளையாடியதைக் கண்டு, அடுத்து விளையாட வேண்டிய முறை உடையவளான வாசவதத்தையின் தோழி விச்சுவலேகைக்கு மிகுந்த ஆத்திரமும் பொறாமையும் ஏற்பட்டுவிட்டது. எனவே அதன் விளைவாக அவள் ஈராயிரத்தைந்நூறு எண்ணிக்கைவரை ஆடிக்காட்டி, அயிராபதியின் திறமையிலும் தன் திறமை உயர்ந்த தென்று நிரூபித்தாள். இதற்குப்பின் விளையாடிய பதுமையின் தோழியாகிய ஆரியை என்பவள், திறமையாக விளையாடினாலும், மூவாயிரம் எண்ணிக்கைக்கு மேலே அவளால் ஆடமுடியவில்லை.

ஆரியை விளையாடி முடித்தவுடன் பந்தை எடுத்து விளையாட ஒருவரும் முன்வராமற் போகவே, வாசவதத்தை தன் தோழிகளை நோக்கி, உங்களில் எவரும் விளையாடுவதற்கு முன் வருவதற்கு விரும்பவில்லையா?’ என்று சற்றுச் சினந் தொனிக்கும் குரலிலேயே கேட்டாள். உடனே கோசல நாட்டைச் சேர்ந்தவளும் வாசவதத்தையின் ஆயத்திலிருந்த வளுமான மானனீகை என்ற வனப்புமிக்க பெண், பெருமிதந் தோன்ற நடந்து முன்வந்தாள். பந்தை எடுத்து விளையாடுவதற்கு முன், அவள் கூடியிருந்த மற்ற பெண்களை நோக்கிச் சில கருத்துக்களைப் பேசலானாள். அந்தப் பேச்சில் அதுவரை விளையாடியவர்கள் தத்தம் ஆடல்களிற் செய்த