பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

356

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பதுமையையும் தோழிமார்களையும் அழைத்துக்கொண்டு அந்தப்புரம் சென்றுவிட்டாள். இதனால் மானனீகையை உதயணன் தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பணிப்பெண் மானனீகையை அழைத்துக்கொண்டு வந்து அவன் முன்பு நிறுத்தினாள். உதயணன் பணிப் பெண்ணுக்குச் சைகை செய்யவே அவளும் ஒதுங்கிச் சென்றாள். செதுக்கி வைத்த பொற்பாவைபோல அழகெல்லாம் ஒன்று திரண்ட உருவமாய் மிரள மிரள விழித்துக் கொண்டு அவன் முன்னே நின்றாள் மானனீகை. உதயணன் காதல் மயக்கம் பிறந்து மிளிரும் கண்களுடனே அவளை ஏறிட்டுப் பார்த்தான். மானனீகை முதலில் அச்சமும் நாணமும் கொண்டு ஒல்கி ஒடுங்கி நின்றாலும், உதயணன் தன்னை ஏறிட்டுப் பார்த்ததும் கொஞ்சம் துணிவை வரவழைத்துக் கொண்டு அவன் பாதங்களைக் குனிந்து வணங்கினாள். அவள் வணங்கும் போது ஒசிந்த சின்னஞ்சிறு மின்னல் இடையையே நோக்கும் படி மோக வெறியிலாழ்ந்திருந்தன அவன் கண்கள். அவள் வணங்கி எழுந்ததும், தன் ஆசையைச் சிறிது அடக்கிக் கொண்டு நடிப்புக்காக ஆருணியைப் பற்றி அவளறிந்த விவரங்களைக் கூறுமாறு கேட்டான் உதயணன். “ஆருணியைப் பற்றிய சில மறைவான செய்திகள் உனக்குத் தெரியும் என்று கேள்விப் பட்டேன்! அதை நீ கூறுவதற்கு முன் உன்னைப் பற்றிய விவரங்களையும் எனக்குக் கூறு” என்று அவன் கேட்கவும், அவள் ஏதோ மறுமொழி சொல்லத் தொடங்கினாள்.

அவளது அந்தக் குரல் அமுதமழை பொழிந்ததேபோல உதயணன் செவிகளில் நுழைந்தது. “அரசே! கோசலத்து மன்னனின் கோப்பெருந் தேவியாகிய சுந்தரி என்பவளுக்குச் சேடியாக இருந்தவள் யான். பாஞ்சால ராசனாகிய ஆருணி, கோசல நாட்டை வென்றபோது என்னையும் இன்னும் பல பெண்களையும் சிறைப்பிடித்து இங்கே கோசாம்பி நகரத்துக்குக் கொணர்ந்தான். இங்கே என்னைக் கோப்பெருந்தேவிக்கு வண்ணமகளாக (அலங்காரஞ் செய்பவளாக) நியமித்திருந்தான். இப்போது ஆருணியை வென்று அவன் நாட்டை நீங்கள் கைப்பற்றி விட்டதனால் நாங்கள்