பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மானனீகை மயக்கம்

361

பின்னால் உட்புகுந்து ஒருபுறமாக ஒளிந்துகொண்டு ‘என்ன நடக்கிறது?’ என்று கவனிக்கலானாள். கூத்தப்பள்ளியின் இடையே அமைந்திருந்த குச்சரக் குடிகையில் நுழைந்து மானனீகையைச் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்தான் உதயணன். மானனீகையின் அழகையும் அவள்மேல் தனக்கு எற்பட்ட அளப்பரிய காதலையும் பாராட்டி அவளது மனம் நெகிழுமாறு பேசினான் உதயணன். மானனீகை அவன் புகழுரைகளைக் கேட்டுத் தலைகுனிந்தாள். உதயணன் ஆர்வத்தோடு அவள் கைகளைப் பற்றினான். மானனீகை அடுத்த விநாடி அவன் அணைப்பிலே சிக்கிக் கொடியெனத் துவண்டாள். மகிழ்ச்சி மிகுதியில் வசமிழந்தனர் அவர்கள். வசமிழந்த அந்த நிலையே நீடித்தது.

வெகு நேரம் கழித்தபின் உதயணன், ‘வாசவதத்தையின் முகம் தங்களுக்கு எவ்வாறு திருமுகம் எழுதுவதற்குப் பயன்பட்டது?’ என்பதைச் சிரித்துக்கொண்டே மானனீகையிடம் விளையாட்டாகக் கூறினான். அதற்குப் பதிலாக மானனீகையும் சிரித்துக்கொண்டே சில கூறினாள். இறுதியாக, இரவு நெடுநேரம் ஆகியிருக்கவே இருவரும் பிரியவேண்டிய போது நெருங்குவதை அறிந்தனர். ‘நாள்தோறும் தன்னை அதே இடத்தில் வந்து அன்று போலவே சந்திக்க வேண்டும்’ என்று அவளை வேண்டிக் கொண்டு தன் சிறு விரலில் அணிந்து கொண்டிருந்த மோதிரத்தை அவள் கரத்து விரலில் அணிவித்து மகிழ்ந்தான் உதயணன். இதுவரை ஒளிந்து இருந்து கொண்டே இந்த நிகழ்ச்சிகள் யாவற்றையும் கண்டு கொண்டிருந்த காஞ்சனமாலை, இப்போது மெல்ல அங்கிருந்து வெளியேறிச் சென்றாள். அவள் தத்தையின் அந்தப்புரத்திற்கு உடனே சென்று, நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் அவளிடம் கூறத் தொடங்கிய அதே நேரத்தில், இங்கே கூத்தப்பள்ளியிலிருந்து மானனீகையும் உதயணனும் பிரிய மனமின்றியும் இன்ப நினைவுகளோடும் பிரிந்து வெளியேறினர்.