பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
68. உண்மை வெளிப்பட்டது

றுநாள் வைகறை நேரத்தில் உதயணன் சிறிதும் எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. ‘பொழுது புலர்ந்ததும், தான் காஞ்சனமாலை மூலமாகக் கேள்விப்பட்ட உதயணன் - மானனீகை உறவைப்பற்றி அவனிடமே சாமர்த்தியமாக விசாரிக்க வேண்டும்’ என்று எண்ணியவாறே மனவேதனையுடனே அன்றைய அந்த இரவை உறங்காமலே கழித்தாள் தத்தை. ‘உதயணன்-மானனீகை ஆகிய இருவரும் தனக்கு அலங்காரம் செய்வது என்ற பேரில் தன்னை எந்த விதத்தில் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்?’ என்பது பற்றிக் காஞ்சனமாலை கூறியவையும், அவர்கள் கூத்தப் பள்ளியில் அளவளாவிச் சரசமாடியதாகக் கேள்விப்பட்டதும் தத்தையின் உள்ளத்தை அணுஅணுவாகச் சிதைத்து வருத்தின. ‘பொழுது புலரட்டும்! உதயணனிடம் சாதுரியத்துடன் பேசி உண்மையை வரவழைத்து விடலாம்’ என்று விடிவதற்குக் காத்திருந்தாள் அவள்.

உதயணன் மானனீகையைக் கூத்துப்பள்ளியில் சந்தித்துப் பிரிந்தபின் அன்றிரவு தத்தையையோ, பதுமையையோ காண்பதற்குச் செல்லாது நேரே தன் சயன அறைக்குச் சென்று உறங்கிவிட்டான். பொழுது புலரும் தருணத்தில் அவன் எழுந்தபோது, வாசவதத்தை தன்னைக் காண்பதற்காக வந்து தன் சயன அறைவாயிலில் காத்திருப்பதை அறிந்தான். அவ்வளவு அருங்காலையில் அவள் தன்னைத் தேடிவர நேர்ந்தமைக்குக் காரணம் என்ன என்றெண்ணியபோது, உதயணனுக்குத் திகைப்பு ஏற்பட்டது. கண்கள் சிவந்து கலங்கிய முகத்துடனே வந்து நின்ற அவளை அணுகி, என்னவென்று அன்போடும் மிகுந்த ஆதரவோடும் கேட்டான் அவன். “அரசே! நேற்றிரவு நான் விந்தையானதொரு கனவைக் கண்டேன்; அதைக் கேட்டருள வேண்டும்” என்றாள் தத்தை. “அது என்ன கனவென்று எனக்கும் தான் சொல்லேன்” என்று கேட்டான் உதயணன். “நேற்று இரவில்