பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



உண்மை வெளிப்பட்டது

363

மனத்தாலும் உங்களைப் பிரிய விரும்பாத என்னைப் பிரிந்து நீங்கள் கூத்தப்பள்ளிக்குச் சென்று அங்கே வேறொரு பெண்ணுடனே சரசமாடியதாகவும், என் முகத்தில் மாறிமாறி எழுதிய வசனங்களைச் சொல்லி அவளோடு சிரித்ததாகவும், அவளும் நீங்களும் பிரியும்போது நீங்கள் ஓர் மோதிரத்தை அவளுக்கே அணிவிரித்ததாகவும் கனவு கண்டேன் அரசே!” என்றாள் வாசவதத்தை. இவ்வாறு கூறிவிட்டு உதயணனின் முகபாவத்தைத் தன் பார்வையாலே ஊடுருவினாள் அவள். அவன் கைச்சுட்டுவிரலில் மோதிரம் இல்லாமல் விரல் மூளியாயிருப்பதையும் கண்களின் நோக்கிலேயே கண்டுபிடித்துவிட்டாள் தத்தை.

உதயணன் தத்தையின் கனவைக் கேட்டுத்திடுக்கிட்டான். தான் மானனீகையைச் சந்தித்தது அவளுக்குத் தெரிந்துவிட்டதோ என்று பயம் தோன்றியது அவனுக்கு. ஆயினும், அந்த இக்கட்டான நிலையிலும், தன்னைச் சமாளித்துக்கொண்டு, பதில்கூற அவனால் முடிந்தது. “தத்தை! நீ சொல்லுகிறாயே அது போன்ற அநுபவத்தைக் கனவில்கூட நான் நினைத்ததில்லையே! வீணாக ஏதேதோ எண்ணிப் பயந்து கொண்டிருக்கிறாய். கலக்கமடையாதே! உனது உள்ளத்திலேயே நான் இடைவிடாமல் வசிக்கும் போது அங்கிருந்து வேறு ஒருவரை நாடிச்செல்வது என்பது எவ்வாறு சாத்தியம்? உன்னைப்போல் கற்புநெறியில் ஒழுகும் பெண்டிர் இப்படிச் சந்தேகமாக நினைப்பதும் தகுமோ?” என்று ஒருபாவமும் அறியாதவன்போல அவளை நோக்கிக் குழைந்து கூறினான் அவன். இவ்வாறு அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டதும் தனக்குள் சிரித்துக் கொண்டாள் வாசவதத்தை.

“ஏதோ கனவிற் கண்டதை மற்றவர்களிடம் கூறினால் தீமை நிகழாதென்று எண்ணிக் கூறினேன். வேறு எதுவும் நான் பிழையாக எண்ணிக் கொள்ளவில்லை. அன்றியும் என் மனத்திலுள்ளவற்றை உங்களிடமன்றி வேறு யாரிடம் நான் கூறுவேன்?” என்று அவனுக்குப் பதில் கூறிவிட்டு, வஞ்சகம் பொருந்திய அவன் செயலை எண்ணி எண்ணி வருந்தும்