பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உண்மை வெளிப்பட்டது

365

என்றெண்ணிக் கொண்ட அவன், ‘மானனிகை!’ என்று அன்பொழுக அழைத்துக்கொண்டே அவளைத் தழுவ வந்தான். அங்கு நின்ற தத்தை பேசாமல், மெளனமாக இருந்துவிட்டாள். தழுவ வந்த கைகளை மட்டும் தன்னைத் தழுவ விடாமல் விலக்கினாள் வாசவதத்தை. தழுவவிடாமல் தன் கைகளை விலக்கியதைக் கண்டு, ‘மானனீகை நம்மோடு ஊடுகிறாள் போலும்’ என்றெண்ணிக் கொண்டான் உதயணன். எனவே, அவளது ஊடலை நீக்க வேண்டும் என்று கருதி, “இந்த அரசு முழுவதும் எனக்கு வேண்டும் என்று நீ கேட்டாலும் இதை உனக்கு உடனே அளித்து விடுவேனே மானனீகை உன் சினத்தை என்னால் எவ்வாறு தாங்க முடியும்? கோபம் தணிவாயாக மானனீகாய்!” என அவளை நோக்கிக் கூறியவாறே உதயணன், அவள் கால்களைப் பற்றினான். அவள் உடனே கோபத்தோடு தன் கால்களை அவன் பிடியிலிருந்து உதறிக் கொண்டு ஒதுங்கிச் சென்றாள். அந்த நிலையிலும், ‘அவள் மானனீகை இல்லை, வாசவதத்தைதான்’ என்பதை உணராத உதயணன், “மானனிகாய்! ஒரு புதுச் செய்தியைக் கேட்டாயா? நேற்றிரவு நாமிருவரும் இங்கே சந்தித்துப் பேசிய நிகழ்ச்சிகளை எல்லாம் வாசவதத்தை இன்று காலை என்னிடம் வந்து, தான் அவ்வாறு ஒரு கனவு கண்டதாகக் கூறினாள். பாவம்! அவளுடைய பேதமையைப் பார்த்தாயா? வாசவதத்தை சூதுவாதில்லாதவள். ‘என் மனத்திலும் அத்தகைய நினைவு இல்லை’ என்று நான் கூறியவுடனே அதை நம்பிக் கேட்டுக் கொண்டு பேசாமல் போய்விட்டாள் அவள்!” எனக் கூறினான். தான் கூறிய அதனாலாவது அவள் ஊடல் தணிந்துவிடும் என்றெண்ணிக் கொண்டு அவளை நெருங்கினான் உதயணன்.

இருளில் அவள் கரங்கள் அவன் பிடியிற் சிக்கின. ஆனால், வாசவதத்தை கைகளை விலக்கிக்கொண்டு, “நான் மானனீகை இல்லை; வாசவதத்தை! இதோ என்னை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு அவன் முன் ஒரு விநாடி நின்றாள். மறுவிநாடி அங்கிருந்து பாய்ந்து