பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

368

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

தான்” என்றான் உதயணன். அவன் கோபம் எதிரே நிற்கும் வயந்தகன் மேலே திரும்பிவிட்டதுபோலத் தோன்றியது. பூடகமாகவும் சினத்தோடும் உதயணன் இவ்வாறு தன்னை நோக்கிக் கூறியதைக் கேட்ட வயந்தகன், ‘என்ன நடந்திருக்க வேண்டும்?’ என்பதைத் தனக்குள் அனுமானித்துக் கொண்டான். தானும் சினங்கொண்டவன்போல உதயணனுக்கு மறுமொழி கூறலானான் அவன்.

“பெண்களும் தேவியரும் பந்துகளை விளையாடுகின்ற அழகைக் கண்டு வரவேண்டும் என்றுதான் நான் கூறினேனே யொழிய, ‘மானனீகையைக் கண்டு மயங்கி அவளிடத்தில் கரந்து பழகும் காதல் ஒழுக்கத்தை மேற்கொள்க’ என்று நான் உன்னிடம் சொல்லவில்லையே! கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையின் சினத்தைத் தணிக்கும் தகுதியுடையவர் இங்கு யார் இருக்கிறார்கள்? இயலும் காரியமா என்ன இது? ஆனாலும் என்னால் ஒன்று செய்ய முடியும்! எப்படியாவது ஓர் ஆறு ஏழு நாழிகைவரை மானனீகையின் கூந்தலை வாசவதத்தை அறுத்துவிடாதபடி நிறுத்திச் சாமர்த்தியமாகத் தடுத்துவிட முடியும் அதற்குமேல் அவள் கோபத்திற்கு முன்னால் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. எனவே, நீதான் அந்த ஆறு ஏழு நாழிகைக்குள் வேறு யாரையாவது அனுப்பவேண்டும்” என்று உதயணனிடம் கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் வயந்தகன்.

உதயணனிடமிருந்து புறப்பட்ட அவன் நேரே மானனீகையை வாசவதத்தை கட்டி வைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்த இடத்திற்கு வந்தான். அவன் அந்த இடத்திற்குள் நுழைந்ததுமே அங்கிருந்த வாசவதத்தையின் தோழி ஒருத்தி, “இப்போது இங்கே வரவேண்டாம் தேவியார் சினம் மிக்க நிலையில் இருக்கிறார்” என்னும் பொருள் புலப்படும் படி கையசைத்துச் சைகை செய்து அவனைத் தடுத்தாள். உடனே வயந்தகன் அவள் கூறியதைக் கேட்டு மிகவும் பயந்து நடுங்கினவன்போல நடித்து, “இவ்வாறு கட்டி வைத்துத் தண்டிக்கும்படியாக அவள் செய்த குற்றம் என்ன?” என்று