பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பின் ஒன்றாக மானனீகையின் கூந்தலை அரிவதற்காக வாசவதத்தை அளித்த அக்கத்தரிகைகளைக் குற்றம் கற்பித்து விலக்கிக்கொண்டே பொழுதைக் கழித்தான் வயந்தகன். இங்கே நிலை இவ்வாறிருக்க அங்கே உதயணன் மனம் பதறி, என்ன செய்வதென்று புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தான்.

‘ஆறேழு நாழிகைகள் வயந்தகன் மானனீகையைக் காப்பாற்றி விடுவான்; அதன் பின்பு அவள் கதி..?’ நினைத்துப் பார்க்கவும் அஞ்சியது உதயணன் உள்ளம். இந்தக் துயரம் சூழ்ந்த நிலைமையில் எதிர்பாராத பேருதவி அவனுக்குக் கிட்டியது. புறநகரின் எல்லையில் உஞ்சைநகரம் சென்ற யூகி முதலியோர் திரும்பி வந்து தங்கியிருப்பதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் நகருக்குள் வந்துவிடுவார்கள் என்றும் ஒரு காவலன் உதயணனிடம் ஓடோடியும் வந்து கூறினான். உடனே மனம் களித்த உதயணன், யூகியை அப்போதே உடனடியாக அழைத்து வருமாறு அந்தக் காவலனையே அனுப்பினான். ‘அந்தத் துயர நிலையை யூகியின் வரவால், அவனைக் கொண்டு எப்படியும் போக்கிவிடலாம்’ என்று முற்றிலும் நம்பினான் உதயணன். சென்ற காவலன் யூகியை விரைவில் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வந்துவிட்டான்.

யூகியைப் பெரு மதிப்போடும் மகிழ்ச்சியோடும் வரவேற்க வேண்டிய உதயணன், அப்போது தன்னைச் சூழ்ந்திருந்த தொல்லையால் அவைகளை மறந்து அவசர அவசரமாக நடந்த நிகழ்ச்சிகள் யவற்றையும் அவனிடம் சுருங்கக் கூறி, எப்படியாவது மானனீகையை அந்த அவமானத்திலிருந்து விடுவிக்குமாறு வேண்டிக் கொண்டான். ஆனால் யூகியோ, “உதயண! இந்த விஷயமாய் வாசவதத்தையுடன் சமாதானமாகப் பேசி மானனீகையை விடுவிக்க இயலாதபடி உன் குற்றமே இதில் பெரும்பகுதியாக இருக்கிறது! எனவே மானனீகையை விடுக்குமாறு தத்தையிடத்தில் நான் போய்க் கேட்பதற்கு இயலாது. வயந்தகனைப்