பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பதுமையை அழைத்து வரச் சொல்லி அவசரமாக ஒரு பணிப்பெண்ணை அனுப்பினான் உதயணன்.

பதுமாபதி உடனே உதயணனிடம் ஓடிவந்தாள். உதயணன் அவளை அன்போடு தழுவிக்கொண்டு வரவேற்றான். அன்பும் இனிமையும் இழைத்த குரலில், “அடிச்சியை இப்போது விரைவாக அழைத்த காரணம் என்ன?” என்று கேட்டாள் பதுமை. உதயணன் அதற்கு மறுமொழி கூறாமல் அமைதியாக அவளையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். பதுமை மீண்டும் அதே பழைய கேள்வியைக் கேட்டாள். உதயணன் இப்போதுதான் மெல்ல வாயைத் திறந்தான். “பதுமை! இப்போது வாசவதத்தையிடம் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அதை நானே அவளிடம் சென்று நிறைவேற்றிக்கொள்ள இயலாதவனாக இருக்கின்றேன். அவளிடம் போக எனக்குத் தயக்கம் உண்டாகிறது. எனக்குத் தெய்வீகக் காதலி நீ! என் பொருட்டு நீ தத்தையிடம் சென்று இதைச் செய்துதான் ஆகவேண்டும்” என்று வேண்டிக் கொண்டு அவளிடம் விவரங்களைச் சூசகமாகக் கூறினான்.

பதுமை அவன் வேண்டுகோளை மறுக்க முடியாமல், வாசவதத்தையைக் காண்பதற்குச் சென்றாள். தத்தை பதுமையைப் புன்முறுவலோடு வரவேற்றாள். பதுமை, தத்தையை ஓர் ஒதுக்குப் புறமாக அழைத்துச் சென்று, “இவ்வாறு இந்த இளம்பெண்ணைக் கட்டிவைத்துத் துன்புறுத்துவதனால் நமக்கென்ன ஊதியம் கிடைத்து விடப்போகின்றது? கணவனே நெறிதவறிப் பிழை செய்து விட்டாலும் பெண்களாகப் பிறந்த நாம் பொறுத்துப் போதலே நமக்குப் பெருமை! இழிந்தவர்கள் செய்யும் குற்றத்தைப் பெருந்தகைமை உடையவர்கள் ஒரு பொருட்டாகக் கொள்வார்களா? என் பொருட்டு நீ இந்தப் பெண்ணைத் துன்புறுத்துகின்ற செயலை இவ்வளவில் விட்டு விட வேண்டும்” என்று அவளை அன்புடனே வேண்டிக் கொண்டாள். பதுமையின் அந்த வேண்டுகோளால்