பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தூதுவர் வரவும் வேதனை அழிதலும்

377

‘மானனீகை கோசலத்தரசனுக்கு மகள்! வாசவதத்தை என்பதே அவளுடைய மெய்யான பெயர்! தன் கோப்பெருந்தேவி தத்தைக்கு அவள் தங்கை முறையினள்’ என்றெல்லாம் வெளியான செய்திகளால் மானனீகைக்கும் தனக்கும் இடையேயுள்ள அன்புத் தொடர்பு அறுவதற்கில்லை என்ற உறுதி அவனுக்கு ஏற்பட்டது. அந்த உறுதியைத் தான் அடைவதற்குக் காரணமான செய்திகளை வந்து கூறிய வயந்தகனைப் பாராட்டித் தழுவிக் கொண்டான் உதயணன். எல்லா நற்செய்திகளையும் தம் அரசனிடம் சென்று கூறித் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளோடே வருவதாகத் தத்தையிடமும் உதயணனிடமும் விடை பெற்றுக்கொண்டு சென்றனர் கோசல நாட்டு மன்னனிடமிருந்து வந்திருந்த தூதுவர்கள். வாசவதத்தையும் பதுமையுமே முன் நின்று, மானனீகைக்கும் உதயணனுக்கும் திருமணம் நிகழ மகிழ்ச்சியோடும் முழுஅளவு மனத் திருப்தியோடும் ஏற்பாடு செய்தனர். ‘கோசலத்து வேந்தன் மகளை உதயணன் திருமணம் புரிந்துகொள்ளப் போகின்றான்’ என்ற மங்கலச் செய்தி எங்கும் பரவியது. குறுநில மன்னரும் பெருநில மன்னரும் திருமண அழைப்பு ஓலை பெற்றனர்.

தன் மகள் கோசாம்பியில் வாசவதத்தையின் பாதுகாப்பில் நலமாக இருக்கின்றாள் என்பதையும், உதயணனும் அவளும் காதல் மேற்கொண்டு ஒழுகுகின்றனர் என்பதையும் தூதுவர்கள் வந்துகூறக் கேட்ட கோசல மன்னன் பேருவகை உற்றான். திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைப்பதற்காக உடனே தன் பரிவாரங்களுடனும் திருமணத்திற்கு வேண்டிய பெரும் பொருள்களுடனும் கோசாம்பி நகரத்துக்குப் புறப்பட்டான் அவன். உதயணனைப் போன்ற ஓர் பேரரசன் தன் மகளுக்குக் கொழுநனாக வாய்த்ததனால் அவன் மனம் மட்டிலாக் களிப்பில் ஆழ்ந்திருந்தது. மானனீகையின் தாயும் கோசலராசன் தேவியுமாகிய வசுந்தரியும் அதே அளவு மகிழ்ச்சியோடு கோசாம்பி நகருக்குப் புறப்பட்டாள். ஒரு மங்கல நாளில் கோசாம்பி