பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மந்தர முனிவர் வந்தார்

379

நாளாக ஆக அவ்வுணர்வு அவளுக்கு அர்த்தமாயிற்று! உதயணனுக்குத் தன் உள்ளம் தானாகவே காணிக்கையாகியிருப்பதை அவள் உணர்ந்தாள். அவனின்றித் தனக்குத் தனியே வாழ்வில்லை என்பதையும் அறிந்தாள். விரிசிகையின் நிலையில் ஏற்பட்ட இந்த மாறுதலை அவளுடைய தந்தையாகிய மந்தரமுனிவர் அறிந்தார். காரணம் புரியாதவர் போலத் தம் மகளைத் தாமே அதைப் பற்றிக் குறிப்பாக விசாரித்தார். கள்ளங்கபடமற்ற அந்தப் பெண் எதையும் ஒளிக்காமல் நடந்தது எல்லாவற்றையும் தந்தையிடத்தில் கூறி விட்டாள். அவள் கூறிய அடையாளங்களில் இருந்தும், அந்தச் சமயத்தில் இலாவாண மலைச்சாரலுக்கு வந்து சென்ற அரசர் உதயணனைத் தவிர வேறு எவரும் இல்லை என்று அறிந்ததாலும். ‘தம் மகளின் மனத்தைக் கவர்ந்துகொண்டு சென்றவன் உதயணனே’ என்று அவர் உய்த்துணர்ந்து கொண்டார். ‘தம் மகளுக்கும் அவனே ஏற்ற நாயகன் ஆவான்’ என்று மனம் விரும்பி அமைந்தவர், அதன் பிறகு உதயணனைச் சந்தித்து அவனிடம் விரிசிகையின் திருமணம் பற்றிப் பேசி முடிவு செய்வதற்குக் காலத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் காலம் மட்டும் பொருத்தமாக வாய்க்காமல் அவரை ஏமாற்றம் செய்துகொண்டே இருந்தது.

விரிசிகையின் ஏக்கமும் தவிப்பும், அவள் உதயணனை எண்ணும் நாள்களைப் போலவே வளர்ந்து கொண்டிருந்தது. உதயணன் யூகியை இழந்த செய்தி, தத்தை எரியுண்டதாகக் கூறப்பெற்ற பொய்ச் செய்தி இவைகளைக் கேள்விப்பட்ட முனிவர், திருமண விஷயமாக அப்போது உதயணனைச் சந்தித்துப் பேசுவதற்குக் காலம் ஏற்றதில்லை என்றே எண்ணி நாளைக் கடத்திக் கொண்டு வந்தார். ஆனாலும் ‘உதயணனை எண்ணி விரிசிகை தாபத்தால் உள்ளுறத் தவித்துக் கொண்டிருக்கின்றாள்’ என்று கண்டுணர்ந்தபோது அவர் பரபரப்பும் அவசரமும் கொண்டார். இந்தச் சமயத்தில் தான் உதயணன் மகத மன்னனாகிய தருசகனின் படை உதவியால்