பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

380

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

கோசம்பியை ஆருணியிடமிருந்து மீட்டுக் கொண்டதும் யூகி, தத்தை ஆகியோர்களைத் திரும்ப உயிருடன் பெற்றதுமாகிய செய்திகளை விரிசிகையின் தந்தையாகிய மந்தர முனிவர் அறிய நேர்ந்தது. உடனே அவர் கோசாம்பி நகரத்திற்கு உதயணனைக் காண்பதற்காகப் புறப்பட்டார்.

சோசாம்பியை அடைந்து அரசவை கூடியிருக்கும் போதில் உதயணனைக் காண அவைக்குள் நுழைந்து, வந்த செய்தியைக்கூற நேரம் நோக்கிக் காத்துக்கொண்டிருந்தார் அவர். உதயணனின் கவனம் மந்தர முனிவரின் பக்கமாகத் திரும்பிய போதில், அவர் உதயணனை நோக்கித் தாம் வந்த காரியத்தை விவரிக்கலானார். “பெருமை பொருந்திய வத்தவர்குலப் பேரரசே! முக்கியமானதும் உனக்கு விருப்பத்தைத் தரக் கூடியதுமான ஒரு நல்ல செய்தியைப் பற்றி இப்போது உன்னிடம் பேசுவதற்காக நான் வந்திருக்கிறேன். நீயோ சிறப்பும் பெருந்தகைமையும் பொருந்திய சிறந்த குலத்தைச் சேர்ந்தவன். நான் யார் என்பதையும் கூறுகிறேன்; கேட்பாயாக! முன்பு மந்தர நாட்டின் அரசனாக இருந்து, பருவ முதுமையால் மக்களிடம் அரசாட்சியை ஒப்படைத்து விட்டுத் துறவறம் மேற்கொண்ட மந்தர மன்னன் நான்தான். இப்போது என் தவப்பள்ளி இலாவாண மலைச்சரலில் இருக்கின்றது. அங்கே நான், என் மனைவி நீலகேசி, என் மகள் விரிசிகை ஆகிய மூவருமே வாழ்ந்துவருகிறோம்...” என்று கூறிக் கொண்டே வந்து சற்றே நிறுத்தினார் மந்தரமுனிவர்.

‘விரிசிகை’ என்ற பெயரையும் இலாவாண மலைச் சாரலையும் அந்த முனிவர் நினைவூட்டியதும் உதயணனுக்கு முகமலர்ச்சி ஏற்பட்டது. ‘வந்திருப்பவர் எதற்காக வந்திருக்கிறார்?’ என்பதை அவனாகவே மனக் களிப்போடு அனுமானித்து உணர்வதற்கு முயன்றான். அதற்குள் தாம் இடையே நிறுத்திய பேச்சை மேலே தொடர்ந்தார் மந்தர முனிவர். “நீ உண்டாட்டு விழாவிற்காக இலாவாண மலைச் சாரலுக்கு வந்திருந்தபோது நான் சில புண்ணிய தீர்த்தங்களில்