பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மந்தர முனிவர் வந்தார்

381

நீராடி வருவதற்காக யாத்திரை சென்றிருந்தேன். திரும்பி அங்கே வந்த பின்பு, விரிசிகை மூலமாக எல்லாவற்றையும் அறிந்து கொண்டேன். அந்தச் சம்பவம் இன்றுவரை உனக்கும் நினைவிருக்கும் என்று எண்ணுகின்றேன். விரிசிகையையோ, அந்த நிகழ்ச்சியையோ நீ மறந்திருக்க மாட்டாய் என்பது என் உறுதியான நம்பிக்கை! எனவேதான், நான் இங்கு வந்தேன். நீ மாலை தொடுத்துச் சூட்டிவிட்டு வந்த தினத்திலிருந்து விரிசிகை உன் நினைவாகவே இருக்கின்றாள். உன் பிரிவினால் அவள் எய்தியிருக்கும் துயரம் உரைக்கும் தரத்தினது அன்று. உன்னிடம் பறிகொடுத்த மனத்தினளாய் எப்போதும் உன் நினைவு சூழவே விரிசிகை அங்கே சீவனற்று இயங்கி வருகின்றாள். உனக்காக உள்ளத்தை அர்ப்பணித்துவிட்டுத் தணியாக் காதலுடனே காத்திருக்கும் காரிகையை ஏமாறச்செய்வது உன்போன்ற ஆடவருக்கு அழகு அன்று. ‘நான் என் மகளை உனக்கு மணம் செய்து கொடுக்கிறேன். நீ அவளை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று உன்னை வற்புறுத்துதல் எனக்குப் பண்பாடு ஆகாது. இருந்தாலும் விரிசிகைக்கு உன்னை மணம் செய்துகொள்ளும் உரிமை இருக்கிறது. உனக்கு விரிசிகையை மணந்துகொள்ளவேண்டிய கடமை பண்டை வினைத் தொடர்புடையதாக இருக்கிறது. முன்பே அவளுக்கு மலர்மாலை சூட்டியவன் நீ! முறை என்ற வகைக்கு அந்தப் பழைய நிகழ்ச்சியும் சான்றாக நிற்கிறது. ஆகையால் என் விருப்பப்படி நானே மனமுவந்து விரிசிகையை உனக்குக் கொடுக்கின்றேன். விரிசிகையை ஒரு நல்ல மங்கல நாளில் நீ மணம் செய்து கொள்ளவேண்டும்” என்று மந்தரமுனிவர் வேண்டிக் கொண்டார்.

உதயணனுக்கும் அந்த வேண்டுகோள் விருப்பத்தையே உண்டாக்கியது. ஆயினும் தன் தேவிமார்களுள் முதன்மை வாய்ந்தவளாகிய வாசவதத்தையைக் கலந்து ஆலோசித்து, அவள் சம்மதம் பெற்றுக்கொண்ட பின்னரே முனிவரிடம் தன்னுடைய உடன்பாட்டைத் தெரிவிக்க விரும்பினான்