பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விரிசிகை திருமணம்

385

உதயணனால் அரண்மனையிலிருந்து அனுப்பப்பட்டவர்கள் இலாவாணத்தை அடைந்தனர். விரிசிகை அவர்களோடு புறப்படுவதற்கு வேண்டிய ஏற்பாடுகளை முனிவர் முன்கூட்டியே செய்து வைத்திருந்தார். வாழ்க்கையில் அவர் துறவி. பொருள்களின் நிலையாமையையும் அறிந்தவர். உலக மாயையாகிய பாசவலையிலிருந்து விடுபடுவதற்கு முயலும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர். ஆயினும் விரிசிகையின் பிரிவு அவர் மனத்தைத் துறவு நெறியில் மேலும் உறுதிப் படுத்தியது. திடுமென்று அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை! ‘விரிசிகையோடு தாமோ, தம் மனைவியோ, கோசாம்பிக்குச் செல்வதில்லை’ என்ற தீர்மானித்திற்கு வந்தார் அவர். ‘வந்திருக்கும் அரண்மனை மனிதர்களோடும் ஆசிரமத்தைச் சேர்ந்த வேறு சில தவ மகளிர்களுடனும் விரிசிகையை அனுப்பிவிட வேண்டும்’ என்ற உறுதியான எண்ணத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார். துறவு நம்பிக்கை, துறவின்மேல் உறுதியான பற்று என்னும் இவை எல்லாம், ஒரு சிறு பாச உணர்வினால் பாதிக்கப்படுமாயினும் மீண்டும் தொடர்ந்து பலவகையான பாசங்கள் வளர்ந்து கொண்டே போவதற்கே உரிய காரணங்களாகிவிடும். ‘விரிசிகை, உதயணன் திருமணத்தைத் தாம் சென்று கண்டால், தமக்கும் அதே போல உலக வாழ்வில் தம் மகள் மேல் அத்தகையதோர் பாசம் ஏற்பட்டுவிடுமோ?’ என்று அஞ்சினார் மந்தர முனிவர்.


‘விரிசிகையை மணந்துகொள்ள நான் உடன்படுகின்றேன்’ என்று உதயணன் எப்போது கூறினானோ, அப்போதே உலக வாழ்வில் எனக்கு இருந்த ஒரே ஒரு கடைசி பந்தமும் அற்றுப் போனது. ‘இனி நான் தவத் தொடர்பு ஒன்றை மட்டுமே தாங்குவதற்கு உரியவன்’ என்றிவ்வாறாக மந்தர முனிவர் சிந்தித்தார். ‘விரிசிகையுடன்கூட அவரும் அவர் தேவியும் கோசாம்பிக்குச் செல்லவேண்டாம்’ என்று தம்முடைய மனத்திற்குள்ளிருந்து ஏதோ ஒரு சக்தி அடிக்கடி கூறிக்கொண்டே இருப்பதுபோல அவருக்குத் தோன்றியது!


வெ.மு-25