பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

களையே இனி நீ உன்னுடைய தாயாராகவும், தமக்கையராகவும் நினைத்துக்கொண்டு அவர்களை மதித்து வாழ வேண்டும். நாங்கள் சென்று வருகிறோம். எங்களை மறந்துவிடாதே!” என்று கூறிவிட்டு வாழ்த்தியபின் ஆசிரமத்திற்குத் திரும்பினர். விரிசிகை அவர்களைக் கைகூப்பி வணங்கிக் கண்களில் நீர்மல்க விடை கொடுத்தாள். அவர்கள் சென்றபின் விரிசிகையை, மக்கள் காணுமாறு வீதிகளின் வழியே நடத்தி அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.

கோசாம்பியின் புறநகரத்துச் சோலையிலிருந்து இலாவாணத்திற்குத் திரும்பிச் சென்றவர்கள், விரிசிகையின் தந்தையான மந்தர முனிவரிடமும் தாய் நீலகேசியிடமும் நடந்தவற்றை விவரித்தனர். அதே ஆசிரமத்தில் அதே மலைச்சாரலில் விரிசிகை யில்லாமல் வாழ்வது அவருடைய மனத்தை வேதனையால் அரித்தது. பாசவுணர்வாகவும் உருப்பெற்று அரித்தது. திடீரென்று மந்தர முனிவருக்கு மனத்தில் என்ன தோன்றியதோ தெரியவில்லை! “நீலகேசி” என்று தன் தேவியை அழைத்தார். நீலகேசி அவருக்கு முன்வந்தாள். “இனி என்னால் இதே ஆசிரமத்தில் விரிசிகையை மறந்து எனது கடுமையான தவத்தின் நியமங்களை மேற்கொண்டு பொறுமையாக வாழ முடியாது போலிருக்கிறது. நான் வேறிடத்திற்குப் போகிறேன். உன்னையும் பிரிந்து தனிமையான கடுந்தவத்தில் ஈடுபடப் போகிறேன் எனக்கு விடைகொடு” என்றார். அவள் ஏதேதோ சொல்லி மறுத்துக் கூற முயன்றாள். ஆனால், மந்தரமுனிவர் அவளுடைய மறுப்பை இலட்சியம் செய்யாமலே புறப்பட்டுவிட்டார். ஆசிரமத்து நிகழ்ச்சி இவ்வாறிருக்கக் கோசாம்பி நகரின் நிகழ்ச்சிகளை மேலே தொடர்ந்து கவனிப்போம்.

கையிலே செங்குவளை மலரை ஏந்தித் தெய்வமகள் ஒருத்தி ஊர்ந்து வருவதுபோலக் கோசாம்பி நகரத்து வீதியில் மென்னடை பயின்று, தன்னை அழைத்துச் செல்லும் அரசபோக ஆரவாரங்களுடனும் பரிவாரத்தினருடனும் சென்றாள் விரிசிகை. அவளுக்குப்பின் ஆசிரமத்தில் அவள் பழகிப்