பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விரிசிகை திருமணம்

389

பயின்ற குயில், மயில், புறா, கிளி, மான், பாவைகள் முதலியவற்றையும் கொண்டு சென்றனர். விரிசிகை இவ்வாறு வீதியில் நடந்து அரண்மனைக்குச் சென்றபோது அவளைக் கண்ட கோசாம்பி நகரத்து மக்கள் பலவாறு பாராட்டி வியந்தனர். “மந்தர முனிவர் செய்த வேள்வியில் தோன்றியவளோ இந்தத் தெய்வ கன்னிகை?” என்று வியந்து கூறினர் சிலர். “கையிலே செங்குவளை மலரைப் பற்றிச் செல்லும் திருமகளின் அவதாரமோ?” என்று வியந்தனர் வேறு பலர். “உதயணன் இத்துணை நாள் இவளைப் பிரிந்து எவ்வாறு இங்கே ஆற்றியிருக்க முடிந்தது?” என்றெண்ணிக் கொண்டனர் மற்றும் சிலர். “இவளுக்கு நிகரான அழகுடையவளை உலகிலேயே காண்பது அரிது! ‘நானே சிறந்த அழகி’ என்று இறுமாந்திருக்கும் எந்தப் பெண்ணும் இவளைக் கண்டால், உறுதியாகத் தலைகுனிந்து நாணிப்போவது நிச்சயம்! இயற்கையிலேயே அழகின் பிம்பமாக விளங்கும் இவளுக்கு அலங்காரம் செய்திருக்கிறார்களே! அவர்கள் எவ்வளவு பெரிய பேதைகள்!” என்று இவ்வாறு அவளைக் கண்டவர்கள் தத்தமக்குத் தோன்றியபடியெல்லாம் பேசிக் கொண்டு பொழுது போக்கினர். விரிசிகை அரண்மனையை அடைந்தாள்.

அரண்மனை வாயிலில் உதயணன், யூகி, வயந்தகன் முதலியவர்களும் வாசவதத்தை, பதுமாபதி, மானனீகை முதலியவர்களும் அவளை வரவேற்பதற்குக் காத்திருந்தனர். விரிசிகை வந்த உடனேயே தத்தை முதலிய பெண்கள் அவளை அன்போடு தழுவித் தங்கள் அந்தப் புரத்திற்கு அழைத்துச் சென்றனர். கள்ளங்கபடில்லாத அந்தப் பெண், மிக விரைவிலேயே தன் அன்பால் தத்தை, பதுமை முதலியவர்களுடைய மனத்தில் நிரந்தரமான ஓர் இடத்தைப் பெற்றுவிட்டாள். தத்தை முதலிய மூன்று தேவியர்களுமே பெற்ற தாயார்போல இருந்து விரிசிகையின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்தனர். உதயணனுடைய வாழ்வு, நான்கு அன்பு நிறைந்த காதல் மகளிரொடு இன்ப நிறைவாக