பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆசை பிறந்தது

393

தான் மட்டும் சற்றுநேரம் அங்கேயே அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தான் உதயணன். அன்று அவையில் நிகழ்ந்து முடிந்த அந்த வழக்கு அவன் உள்ளத்தை உருக்கியிருந்தது. ‘மக்களைப் பெறாத வாழ்வும் ஒரு வாழ்வா! வாழ்க்கையையும் உடைமையையும் எவராவது கண்டவர்கள் பறித்துக் கொண்டு, கையினால் எள்ளும் நீரும் வாரி இறைக்கும் இழிந்த வாழ்வல்லவா அது?’ என்று இதே வினாக்கள், அவன் உள்ளத்தில் திரும்பத் திரும்பச் சுழன்று கொண்டிருந்தன. ஆம்! உதயணனுக்கும் அன்றுவரை மக்கட்பேறு இல்லை. தன் வாழ்க்கையில் நிறைவேற்ற முடியாத பின்னத்தன்மையை, இந்த அம்சத்தின் குறைவு உண்டாக்கி விட்டதாக அவன் எண்ணினான். உதயணனின் உள்ளம் இதற்காக ஏங்கியது. ஏக்கம் என்பது ஆசையின் அடிப்படை. அது மட்டுமன்று. விருப்பத்தின் வேதனை. அங்கே உதயணன் உள்ளத்தில் அந்த வேதனை பிறந்துவிட்டது. ‘தனக்குப்பின் கோசாம்பியின் அரியணையை அலங்கரிக்க ஏற்ற மகனொருவன் தனக்கில்லையே’ என்ற பெருங்குறையை அவன் உணர்ந்து கொண்டான்.

‘மக்கட்பேறு இல்லையே? தனக்குப்பின் தன் மரபும் தன்னால் ஆளப்படும் நாடும் என்ன ஆவது?’ என்ற கவலை, ஏக்கம், வேதனை ஆகியவைகளினால் உதயணன் எந்த ஒரு துயரத்தை அடைந்தானோ, அதே துயரத்திலாழ்ந்து அங்கே அந்தப்புரத்தில் வாசவதத்தையும் ஏங்கிக் கொண்டிருந்தாள். அன்று காலை எழுந்திருந்தது முதலே இந்தக் கவலை ஏனோ அவளுடைய இதயத்தைப் பற்றி வாட்டிக் கொண்டிருந்தது. தவத்துறையில் சிறந்த துறவிகளின் துறவுச் சாலைக்குச் சென்று, அவர்களை வழிபட்டுவிட்டு வந்தபின் அவர்களுடைய நல்ல ஆசி மொழிகளினால் தனக்கு நன்மையே விளையும் என்ற நம்பிக்கையுடன் வாசவதத்தை தனது அந்தப்புரத்து மேல்மாடத்திலே வந்து இருந்தாள். அவள் மேல்மாடத்தில் வந்து அமர்ந்து, கவலைமிக்க நெஞ்சுடன் வானவெளியை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த சமயத்