பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

396

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

குபேரன் மிக்க அன்புடனும் பெருமதிப்புடனும் அவர்களை வரவேற்று ஒரு சிங்காதனத்தில் அமரச் செய்தான். பின்பு குபேரனுடைய ஆணையால் அவர்களை அழைத்துச் சென்ற தெய்வீக நங்கை அழகாகவும் ஒளிமயமாகவும் இயற்றப் பட்ட மணிமுடி ஒன்றை உதயணனிடம் அளித்தாள். உதயணன் அதனைத் தனக்களித்த குபேரனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் நன்றி செலுத்திவிட்டு, அதை வாங்கித் தன் அருகிலிருந்த வாசவதத்தையிடம் அளித்தான். அடுத்து இருவரும் குபேரனிடம் விடை பெற்றுக்கொண்டு திரும்பிப் புறப்படுவதற்காக எழுந்திருந்தனர். என்ன விந்தை? வாசவதத்தையின் கையிலிருந்த மணிமுடி அப்போது சட்டென்று பிளந்து கண்ணைக் கூசச் செய்யும் ஒளிப் பிழம்பாக மாறி அவள் திருவயிற்றிலே நுழைந்துவிட்டது! கூடியிருந்த யாவரும் இந்த அதிசய நிகழ்ச்சியைக் கண்டனர். வாசவதத்தையோ தன் கையிலிருந்த மணிமுடியைக் காணாமல் திகைத்துப்போய் ஒன்றும் தோன்றாமல் நின்று கொண்டிருந்தாள்!

இவ்வளவில் உதயணன் தன் கனவிலிருந்து விழித்துக் கொண்டுவிட்டான். உடனே தத்தையை எழுப்பி அவளிடம் இந்த அற்புதமான கனவைக் கூறினான். அவளும் இதைக் கேட்டு வியந்தாள். பொழுது புலர்ந்ததும் ஆற்றலிற் சிறந்த முனிவர் ஒருவரிடம் போய், இக் கனவை உரைத்து இதற்குப் பயன் கேட்டான் உதயணன். “குபேரனின் நாடு வெள்ளியங்கிரி முதலிய தேவருலகத்து நாடுகளை எல்லாம் வென்று விளங்கக்கூடிய வெற்றி வீரனாகிய புதல்வன் ஒருவன் விரைவில் உனக்குப் பிறப்பான். இந்தக் கனவின் பயன் இதுவே” என்று அம் முனிவர் பயன் கூறினார். உதயணன் அதைக் கேட்டு மிகவும் மனமகிழ்ந்தான்.

நாள்கள் கழிந்தன. கனவின் பயனை முனிவரிடமிருந்து அறிந்து கொண்டதனால் விளைந்த ஆர்வமும் பெருமையும், தத்தைக்கும் உதயணனுக்கும் வளர்ந்து பெருகிற்று. அந்த ஆர்வ வளர்ச்சியின் விளைவுக்கு ஒர் அறிகுறிபோலத் தத்தை