பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

மகளாகிய சாங்கியத் தாய் உடனே ஒரு சூழ்ச்சியை மேற் கொண்டாள்.

திடீரென்று தன்னை நோக்கி விழுந்து விழுந்து சிரித்த செவிலியைப் பார்த்ததும் வாசவதத்தைக்கு ஒன்றுமே புரியவில்லை. அவள் செவிலியைச் சினத்துடன் நோக்கினாள். “தத்தை! நான் இதுவரை கூறியதெல்லாம் உண்மை என்று தானே நம்பினாய்? அதுதான் இல்லை. இது உன் பொறுமைக்கு நான் வைத்த பரீட்சை. அவ்வளவுதான். எல்லாம் பொய்” செவிலி மீண்டும் பலமாக நகைத்தாள். தத்தை ஆறுதல் பெற்றுவிட்டாள். செவிலியின் சூழ்ச்சி வெற்றியைப் பெற்று விட்டது. சற்றே ஆறுதல் பெற்ற தத்தையின் தலையை மெல்லக் கோதிக் கொண்டே செவிலி சொல்லத் தொடங்கினாள்: “நீ நினைக்கிறபடி உன் தந்தை உன்னை வேறோர் அரசனுக்கு மணம் முடிப்பதற்கு முடியாது. தன் தகுதிக்கு ஏற்ற தகுதி வாய்ந்த மணமகனையே தேர்ந்தெடுக்கவேண்டும். அந்தத் தகுதி அநேகமாக உதயணனிடம் தான் உள்ளது. இளமை, வனப்பு, இல்லொடு வரவு, வளமை, தறுகண், வரம்பில் கல்வி, தேசத்தமைதி, மாசில் சூழ்ச்சி என்ற எட்டுவகைத் தகுதிகளும் குறைவற நிறைந்த மன்னகுமரனுக்கே நின்னை நின் தந்தை மணமுடித்தல் கூடும். இவ்வெண்வகைத் தகுதிகளும் உதயணனிடம் நிறைந்துள்ளன. ஆகையால் மதிநலஞ் சிறந்த உன் தந்தை உனக்கேற்ற நாயகனாக உதயணனைத்தான் தேர்ந்தெடுக்க முடியும்.” செவிலியின் இத் தேற்றுரைகள் தத்தையின் துயருக்குச் சற்றே ஆறுதலளித்தன. இந்த ஆறுதலால் தத்தைக்குப் புதிய ஊக்கம் பிறந்தது. கண்ணிரைத் துடைத்துக் கொண்டாள். ‘நான் உதயணனுக்கே உரியவள் என்னும் விதியை மாறு கொண்டு எந்தை தவறுவராயின் மறுபிறவியிலாவது உதயணனை அடையலாமென்னும் கருத்துடன் இப் பிறவியில் உயிர் விடுவேனேயன்றி இன்னொருவனுக்கு மனம் இணங்கி ஒப்பேனென்று எண்ணினாள். தத்தை வெறும் பெண் மகள் மட்டுமல்லள். அவள் தெய்வீகக் காதல் உலகின்