பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாசவதத்தையின் மயற்கை

399

அவளது அபூர்வமான இந்த ஆசையை ‘எந்த வகையில், எப்படிப் பூர்த்தி செய்யலாம்?’ என்றே அவனுக்கு விளங்கவில்லை. இந்த விதமான அந்தரங்க விஷயங்களை அவன் உருமண்ணுவாவோடுதான் கலந்து சிந்திப்பது வழக்கம், நேற்றுவரை கோசாம்பியில் அவனுடனேயே தங்கியிருந்த உருமண்ணுவா, இன்றுதான் ஓர் இன்றியமையாத செயலின் நிமித்தம் இலாவாண நகரத்துக்குச் சென்றிருந்தான். அவன் இருந்தலாவது தத்தையின் இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு ஏதாவது ஒருவழி கூறுமாறு அவனிடம் போய்க் கேட்கலாம். அவனும் அருகில் இல்லாதது உதயணனுக்கு ஒரு கையே இல்லாமற் போனதுபோலச் சோர்வு தருவதாக இருந்தது. வேறு வழியின்றி அவன் தன் அமைச்சர்களில் சிலரை அழைத்துத் ‘தத்தையின் ஆர்வத்தைப் பூர்த்தி செய்வதற்கு ஏதேனும் மார்க்கம் இருக்கிறதா?’ என்பதைப் பற்றிச் சிந்தித்தான். அவர்களையும் இதுபற்றிச் சந்தித்து ஒரு வழி கூறுமாறு வேண்டிக் கொண்டான்.

ஒரு முடிவும் செய்ய இயலாமல் இரண்டொரு நாள்களும் சென்றுவிட்டன. அப்போது அவசர காரியமாக இலாவாண நகரம் சென்றிருந்த உருமண்ணுவா திரும்பி வந்து விட்டான். உருமண்ணுவாவைக் கண்டதுமே தத்தையின் விருப்பத்தை நிறைவேற்ற இயலாமல் மனம் திகைக்கும் தன் நிலையையும் அவனிடம் பரபரப்போடு விவரித்தான் உதயணன். உருமண்ணுவா உதயணனுக்கு அப்போது உடனே தேவையான அரிய யோசனை ஒன்றைக் கூறினான். ‘உரு மண்ணுவா வந்தால் தன் கவலை தீரும்படி தனக்கு ஏதாவது வழி கூறித் தத்தையின் ஆசை நிறைவேறுவதற்கு உதவி செய்வான்’ என்று உதயணன் நம்பிக் கொண்டிருந்த நம்பிக்கை பாழாகிவிடவில்லை! அந்த நம்பிக்கை மேலும் ஊக்கமடையும் படியாகவே இருந்தது, உருமண்ணுவா கூறிய யோசனை. உருமண்ணுவாவின் சிறந்த ஞாபகசக்தியும் அறியும் கூர்மையும் அதிலிருந்து உதயணனுக்கு நன்றாக விளங்கியது.