பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



75. இயக்கன் வரவு

உருமண்ணுவா கூறிய யோசனை இதுதான்! “முன்பு சிறுவயதில் நாம் இதே கோசாம்பி நகரில் வசித்து வந்த போது ஒரு நாள் நண்பர்களாக ஒன்று கூடிக் காட்டுக்கு வேட்டையாடச் சென்றோம் அல்லவா? அப்போது காட்டில் வெகு தொலைவு அலைந்து திரிந்து களைத்தபின், நீர் வேட்கையால் வருந்தித் தண்ணிர் இருக்குமிடம் தெரியாமல் திகைத்துத் திண்டாடிக் கலங்கிப் போனோம் அந்தச் சமயத்தில் குபேரனுக்கு ஏவல் செய்யும் இயக்கர்களில் ஒருவனாகிய நஞ்சுகன் என்பவன் வந்து நமக்குத் தண்ணிர் கொடுத்துக் காப்பாற்றினானே அந்தச் சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவன் அன்று நம்மை விட்டுப் பிரியும் போது ‘இப்போது ஏற்பட்டாற்போல உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படுகிற காலங்களில் எல்லாம் என்னை நினையுங்கள்! நான் வந்து உங்களுக்கு வேண்டியதை எல்லாம் உதவுகின்றேன்’ என்று அன்புடன் கூறிவிட்டுத் தன்னை நினைப்பதற்குரிய மந்திரத்தையும், என்னை மட்டும் தனியே அழைத்து என்னிடம் கூறிவிட்டுப் போனானல்லவா? அந்த மந்திரத்தை உச்சரித்து அவனை இப்போது இங்கே வரவழைத்து விட்டால் இயக்கனாகிய அவனால் நம் காரியம் நிச்சயமாக நிறைவேறிவிடும்” என்று உருமண்ணுவா தன்னிடம் கூறியபோது, அந்தக் காரியம் முக்காற்பங்கு வெற்றியடைந்து விட்டதாகவே எண்ணி மகிழ்ந்தான் உதயணன். உடனே இயக்கனை நினைத்து வரவழைப்பதற்குரிய மந்திரத்தை ஒரு தனி ஏட்டில் எழுதி உதயணனிடம் கொடுத்தான் உருமண்ணுவா.

அந்தப் பழைய நிகழ்ச்சியும் அவ்வளவு நாள்களுக்கு முன்பு கேட்டிருந்த மந்திரமும் உருமண்ணுவாவின் நினைவுத் திரையிலே சலனமும் அழிவும் இன்றி அப்படியே இருந்தது தான் உதயணனுக்குப் பேராச்சரியத்தை உண்டாக்கியது. அந்த ஆச்சரியம் ஒருபுறம் இருக்க, அவன் எழுதிக் கொடுத்த மந்திரத்தை மதிப்போடும் பயபக்தியோடும் தூய்மையான