பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயக்கன் வரவு

401

நிலையில் ஓதினான் உதயணன். ஓதிச் சிறிது நேரத்திற்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பு காட்டிலே சந்தித்திருந்த நஞ்சுகன் என்னும் பெயரையுடைய அந்த இயக்கன் உதயணன் முன்பு தோன்றி நட்புணர்ச்சியோடு அவனை வணங்கினான். இயக்கனை உதயணனும் மகிழ்ச்சியோடும் பெருமதிப்போடும் வரவேற்றான். நஞ்சுகன் தான் யார் என்பதையும், தன்னைப் பற்றிய பழைய வரலாற்றையும், தாங்கள் முன்பு காட்டில் சந்திக்க நேர்ந்த நிகழ்ச்சியையும் மறுபடி உதயணனுக்கு நினைவுபடுத்தினான்.

“நீ பிரச்சோதனனுடைய மாய யானையால் சிறைப் பட்டுப் பிணிப்புண்டிருந்தபோதும் மகதநாடு சென்று மாணகனாக மறைந்து வாழ்ந்த போதும் என்னை நினைத்து என் உதவியை நாடியிருக்கத் தக்க துன்பங்கள் உனக்கு எத்தனையோ ஏற்பட்டிருப்பதை நான் அறிவேன். ஆயினும் அந்தக் காலத்தில் எல்லாம் என்னை எண்ணி, என் உதவியை நாடாத நீ இப்போது மட்டும் என் உதவியை நாடுவதற்குக் காரணம் என்ன?” என்று நஞ்சுகன் உதயணனை நோக்கிக் கேட்டான். “அப்போது ஏற்பட்ட அந்தத் துன்பங்களெல்லாம் எங்களுடைய மனிதயத்தனத்தினாலேயே தீர்த்துக் கொள்ளக் கூடியனவாக இருந்தன. மனிதயத்தனத்தினால் இயலும் எளிய காரியங்களுக்காக உன்னை அழைப்பானேன் என்று வாளா இருந்துவிட்டோம். இப்போது வாசவதத்தையின் இந்த ஆசையை நிறைவேற்றுவது எங்கள் யத்தனத்திற்கு அப்பாற்பட்டது என்று தெரிந்ததனால்தான் உன்னை விரும்பி அழைத்தோம்” என்று நஞ்சுகனது வினாவுக்குச் சமாதானம் கூறினான் உதயணன்.

“அரசே உனக்குப் பிறக்கப் போகும் புதல்வன் சாதாரணமானவன் அல்லன்! வித்தியாதரர்கள் வாழும் பேருலகத்தாலும் விரும்பப்படுகின்றவன் அவன். அத்தகைய சிறந்த புதல்வனின் கருவை உன் மனைவி தாங்கியிருக்கின்றாள். நீ அவள் விருப்பத்தை இப்போத பூர்த்தி செய்ய வேண்டியது அவசியமே. முன்னால் முத்தியடைந்த பத்திராபதி என்னும் யானை, இப்போது குபேரனிடத்தில் தெய்வ கன்னிகையாகப்

வெ.மு. 26