பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயக்கன் வரவு

403

மாறிப் பிறந்து இங்கே வருவாய்’ என்று குபேரன் அன்று பத்திராபதிக்குச் சாப விடுதலை கூறினான். பின்பு இதன் படியே நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்து முடிந்தது உனக்கும் தெரியும்.

இப்போது அதே பத்திராபதியால்தான் உன் மனைவி வாசவதத்தை கருக் கொண்டிருக்கிறாள். பத்திராபதிக்குப் பஞ்ச மந்திரத்தை உபதேசித்ததற்காக, உன்மேல் நன்றி கொண்டு குபேரனிடம் உனக்கு ஒரு குழந்தை பிறக்க வேண்டுமென்று வரம் கேட்டு அவள் இவ்வாறு செய்துள்ளாள். அவளுடைய ஏற்பாட்டின்படி குபேரன், செளதர்மேந்திரன் என்னும் வித்தியாதரன் மூலமாகச் சோதனன் என்னும் முனிவனை உன் மகனாக அவதரிக்குமாறு ஏற்பாடு செய்திருக்கிறான். எனவே அதே பத்திராபதியை இப்போது நீ இந்த உதவிக்காக அழைத்தால் வானிற் பறக்க வேண்டும் என்ற உன் மனைவியின் மயற்கை உடனே நிறைவேறிவிடும்” என்று சொல்லிப் பத்திராபதியை அழைப்பதற்குரிய மந்திரத்தையும் அவனுக்குக் கூறிவிட்டுச் சென்றான் நஞ்சுகன் என்ற அந்த இயக்கன். இதைக் கேட்டு உதயணன் கவலை நீங்கப் பெற்று மகிழ்ந்தான்.

வாசவதத்தை விரும்பியபடியே அவளுக்குப் பறக்கும் ஊர்தியைச் செய்து தருவதற்கு இயலும் என்ற மனத்திருப்தியோடு அதற்கான முயற்சிகளைத் தொடங்கினான் அவன். தனக்கு நண்பனாகிய இயக்கன் நஞ்சுகன் பத்திராபதியை நினைத்து அழைப்பதற்குரிய மந்திரத்தைக் கூறிவிட்டுச் சென்றபின், உதயணன் அதே மந்திரத்தை எண்ணி இடைவிடாமல் உருவேற்றத் தொடங்கினான். பத்திராபதியின் உதவியால் தத்தையின் ஆசையை நிறைவேற்றிவிடலாம் என்ற விருப்பமே இதற்குக் காரணமாகும். இதே சமயத்தில் உதயணனுடைய அமைச்சர்களும் வாளா இருக்கவில்லை! அங்கங்கே நாட்டின் பல பாகங்களிலும் வாழ்ந்துவந்த திறமை வாய்ந்த தச்சர்களை வரவழைத்து, வானிற் பறந்து சென்று பல இடங்களையும் காணுவதற்குப் பயன்படும்