பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

406

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

“உலகம் முழுவதும் இதில் ஏறினாலும் ஏறட்டுமே! இந்த இயந்திரம் தாங்கும்” என்று சிரித்தவாறே விடையிறுத்தான் தச்சன். தச்சன் இவ்வாறு கூறவும் உதயணன் யாவரையும் ஏறிக்கொள்ளச் சொன்னான். யாவரும் ஏறிக் கொண்டனர். இயந்திரம் புறப்படுவதற்கு இருந்தது. தச்சன், அதைச் செலுத்திக்கொண்டு போகவேண்டிய முறைகளையும், நுணுக்கங்களையும் அப்போது உதயணனுக்கு விளக்கமாக எடுத்துக் கூறலானான்.

“இந்த இயந்திரம் வானில் விரைவாகச் செல்லுவதும் மெல்லச் செல்லுவதும் நீங்கள் மனத்தில் எண்ணுகின்ற எண்ணத்தைப் பொறுத்தே இருக்கின்றது. உயரப் பறக்க வேண்டிய இடங்கள் இவை இவை என அறிந்து, அவற்றிற்கு ஏற்றபடி பறக்க வேண்டும். ஆற்றின் கரைகள், தீவுகள் முதலிய இடங்களுக்கு இயந்திரத்தைச் செலுத்தி நீங்கள் அவ்விடங்களில் இறங்கி இளைப்பாறலாம். மற்றைய இடங்களில் இறங்குவது அவ்வளவாக உசிதமில்லை. இயந்திரத்தின் இலக்கண வகைகள் இன்னின்ன நிலையிலுள்ளன என்று பறக்கும்போது முற்றிலும் உணரவேண்டும்.”

தச்சன் கூறிய உரைகளைக் கேட்டுக் கொண்டபின் உதயணன் இயந்திரத்தைத் தானே இயக்கினான். வனப்பும் விரைவும் ஒளியும் ஒரு சேரத் தோன்றுமாறு இயந்திரம் விரைவாக மேலெழுப்பிப் பறந்தது. கதிரவன் ஒளியில் தகத்தகாயமாக மின்னிக்கொண்டே மேகக் கற்றைகளைக் கிழித்து விலகிக்கொண்டு இயந்திரம் பறந்து வான்மேற் சென்றது. வாசவதத்தையும் உதயணனும் மற்றையோரும் உள்ளங்களித்தனர். வானவெளியின் பரப்புக்கு உட்பட்ட நாடு நகரங்களையெல்லாம் அவர்கள் மேலே விமானத்திற் பறந்த படியே சுற்றிப் பார்த்தனர். மலைகள் அடர்ந்து செழித்து விளங்கும் வன வனாந்தரங்கள், ஆறுகள், அருவிகள், குளிர்பூம்பொழில்கள் எல்லாவற்றையும் மகிழ்ந்து கண்டனர். ஏறியிருந்தோர் பிரமித்து வியப்புக் கொள்ளுமாறு விரைவும் நுணுக்கமும் கொண்டு இயங்கிப் பறந்தது இந்த இயந்திரம். எல்லாவற்றையும் கண்டு முடிந்தபின் இயந்திரத்தைக்