பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சாங்கியத் தாயின் கதை

39

ஒரு தனிச் செல்வி. வாழ்ந்தால் காதலுக்காகவே வாழ வேண்டுமென்று நினைப்பவள். அந்தச் சிறப்பியல்புதான் அவளை இத்தகைய மனத்திட்பம் கொள்ளத் தூண்டியது.

தத்தை கூறிய மொழிகள், ஏற்ற முன்கையில் தொடி வீழ்ந்தாற்போல் அமைந்தன சாங்கியத் தாய்க்கு. உதயணனுக்கு ஏற்ற மறுமொழியையே தத்தையிடம் எதிர்பார்த்த அவளுக்கு அப்படியே கிடைத்தது. ‘பிச்சை யிடுக’ என்று நீட்டிய கையில் பிச்சை யிடுபவனுடைய கொடுக்கும் கரத்திலுள்ள பொன்வளையல் இயல்பாக நழுவி விழுந்தாற்போல் உதயணனுக்கு ஏற்ற மாற்றம் கோரும் செவிலிக்கு, அதுவே சிறந்த முறையில் வாய்த்துவிட்டது. செவிலி தன் தேற்றுரையின் பயனாக எதிர்பார்த்ததும் அதுதானே? பின்பு வாசவ தத்தைக்குத் துணையாகத் தோழிப்பெண் காஞ்சன மாலையைக் காவல் வைத்துவிட்டு உதயணனைக் காணப் புறப்பட்டாள் செவிலித் தாயான சாங்கியத் தாய்.

8. சாங்கியத் தாயின் கதை

காஞ்சன மாலையைக் காவல் வைத்துவிட்டுக் கிளம்பிய செவிலி, வேல்முற்றத்தையும் மயிலாடு முன்றிலையும் கடந்து சென்று தத்தை யாழ்கற்கும் இடத்துக்கு அருகில் தகுந்த நேரத்தை யறிந்து கீதசாலையின் ஒரு புறத்தே காத்திருந்தாள். உதயணன் யாழ் கற்பிக்கும் நேரமாகியதறிந்து அப்போது அங்கே வந்து சேர்ந்தான். வந்தவனைச் செவிலி குறிப்பாகச் சில சொல்லி மணல் முற்றத்திற்கப்பாலுள்ள மாதவிப் பந்தரைச் சார்ந்த புன்குமரமொன்றின் கீழ் அழைத்துச் சென்று இருக்கச் செய்தாள். சுற்றும் முற்றும் பார்த்துத் தங்கள் தனிமையை உறுதி செய்து கொண்டு, கண்ணினும் செவியினும் நண்ணியறியும் ஒற்றர்கள் யாருமில்லாமை யறிந்து சாங்கியத் தாய் அவனிடம் கூறுவாளானாள்: “நற்குடியிலே தோன்றிய அரசிளங்குமரனே! நின் போன்றோர் நருமதை போன்ற பெண்களின் விஷயத்தில் ஈடுபட்டுக் குடி வடுப்படுதல் என்னால் பொறுக்க முடியாது.”