பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

408

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

“இதுதான் என்னுடைய உண்மையான உருவம் அரசே! குபேரனுடைய சாபத்தால் நான் முன்பு பிரச்சோதனராசனிடம் பத்திராபதி என்ற பெண் யானையாக இருந்தபோது உன்னையும் வாசவதத்தையையும் வழிப்பயணமாக இரவில் சுமந்து கொண்டுவர நேர்ந்தது. அப்போது நடுவழியில் இறந்த என் காதில் பஞ்சமந்திரத்தை உபதேசித்துப் பழம் பிறவியிலிருந்த தேவ கன்னிகையாக மாறுவதற்கு நீ உதவி செய்தாய். அதனால் உனக்கு நான் நிறைந்த நன்றிக்கடன் பூண்டுள்ளேன். என் உதவிக்கு உன்னிடம் நான் எந்த மாற்றுதவியையும் எதிர்பார்க்கவில்லை. மேலும் உன்னோடு என்னை வெற்றவளாகவும் கருதவில்லை நான்” என்று கூறிய பின் வானத்தில் சஞ்சாரம் செய்யப் பயன்படக் கூடிய மந்திரம் ஒன்றையும் உதயணனுக்குக் கூறிவிட்டு, யாவரிட மும் விடைபெற்றுக்கொண்டு சென்றாள் பத்திராபதி. வத்தவர்கோனாகிய உதயணனும் பிறரும் அவளை வணங்கி அன்போடு அவளுக்கு விடையளித்தனர். சில திங்கள் கழிந்தன.

வாசவதத்தையின் கரு முற்றிய நிலையை அடைந்தது. உரிய காலத்தில் தங்கச் சிலைபோல ஒர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள் வாசவதத்தை. உதயணன் வாசவதத்தை ஆகிய இருவருடைய உள்ளத்திலும் நிறைந்திருந்த மகிழ்ச்சியைப் போலவே நாட்டு மக்கள் யாவரிடத்தும் மகிழ்ச்சியை நிரப்பியிருந்தது இந்த நிகழ்ச்சி. அரண்மனை வந்தோர்க்கு எல்லாம் வரையாது வழங்குவதற்குப் பலவகைத் தான தருமங்கள் நடக்க ஏற்பாடு செய்திருந்தான் உதயணன். சிறைப் பிடிக்கப் பெற்று அரண்மனைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தவர்கள் யாவரும் இச்சமயத்தில் விடுதலை செய்யப் பெற்றிருந்தனர். அரசருக்கு ஆண் குழந்தை பிறந்ததைக் கொண்டாட நகரெங்குமே கோலாகலமான திருவிழாக்கள் பல நிகழலாயின. தனக்குப் புதல்வன் பிறந்த களிப்பில் நாடெங்கும் உள்ள கலைஞர்கள் யாவரும் பங்கு கொள்ள வேண்டும் என்று கருதிய உதயணன், அவர்களை எல்லாம் தன்னிடம்