பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காலமெல்லாம் நிறைந்த களிப்பு

411

யூகி உஞ்சையிலிருந்து கோசாம்பிக்கும் புறப்படுவதற்கு முதல் நாள் அறிவு வன்மையுள்ள தன் அவையைக் கூட்டினான் பிரச்சோதனன். உஞ்சைநகரத்து அரண்மனையைச் சேர்ந்தவர்களாகப் பல்வகைத் திறமையும் பெற்ற நூற்றுக்கணக்கான அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் தலைவனாகவும் பிரச்சோதன மன்னனுக்கு முதலமைச்சனாகவும் இருந்தவனே சாலங்காயன். கல்வி கேள்விகளிற் சிறந்து தருக்கத்திலும் பெரும் புலமை படைத்த அரசியல் ஞானி அவன். சொல்லப் புகுந்தால், யூகியோடு சமமாக மதிக்கத்தக்க நுண்ணறியும் சூழ்ச்சித் திறனும் உடையவனே! ஆனாலும் பிரச்சோதனனுக்கு என்னவோ தன் சொந்த ஆர்வத்தைக் கைவிடுவதற்கு மனம் இசையவில்லை. அதனால்தான் அவசரமாக யூகி ஊருக்குப் புறப்பட இருக்கும் நிலையிலும், இந்த விவாத நிகழ்ச்சியை எப்படியும் நடத்தியே விடுவது என்று உறுதியோடு எண்ணி ஏற்பாடு செய்திருந்தான் அவன். பிரச்சோதனனுடைய ஆசையை மறுக்க முடியாத நிலையிலேயே யூகியும் இதற்குச் சம்மதித்திருந்தான்.

சாலங்காயனும் யூகியும் சபையில் வாதமிடத் தொடங்கினார்கள். பிரச்சோதனனும், பற்பல கலைகளிலும் வல்லவரான வேறு சில சான்றோர்களும் வாதத்தின் ஏற்றத்தாழ்வுகளையும் வெற்றி தோல்விகளையும் நிர்ணயிப்பதற்குரிய நடுவர்களாக அமர்ந்திருந்தனர். வாதம் வளர வளரச் சாலங்காயன் தளர்ந்து விட்டான். யூகிக்கு எதிர்த்து நின்று தாங்குகிற அவ்வளவிற்கு அவனால் முடியவில்லை. நொடிக்கு நொடி யூகியின் வெற்றியும் சாலங்காயனின் பலவீனமும் தெளிவாகவே புலப்பட்டன. இறுதியில் வாதப் போர் உச்ச நிலையை அடைந்ததும், ‘யூகி வென்றான் சாலங்காயன் தோற்றேவிட்டான்’ என்ற முடிவு தானாக ஏற்பட்டது. அவையோரும் பிரச்சோதன மன்னனும் யூகியின் வெற்றியை மனமாரப் பாராட்டி வாழ்த்துக் கூறினார்கள். “நட்பின் சிறப்பும் கல்விப் பெருக்கமும், பண்பாடும் வீரமும் அமைந்த ஓருருவமாக யூகியை இங்கே நான் காண்கிறேன். பகைவ