பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நரவாணன் நாடிய நங்கை

413

திலகமாசேனை, யாப்பியை இவர்களைத் திருமணம் செய்துகொண்ட மணக் கோலத்தோடு உஞ்சையிலிருந்து கோசாம்பிக்கு வந்த யூகியை உதயணன் சிறந்த முறையில் வரவேற்றான். யூகிக்குப் புதல்வன் பிறந்துள்ளமைக்காக உதயணனும் உதயணனுக்குப் புதல்வன் பிறந்துள்ளமைக்காக யூகியும் ஒருவருக் கொருவர் தங்கள் மகிழ்ச்சியை இனிய மொழிகளால் பரிமாறிக் கொண்டனர். உஞ்சை நாட்டிலிருந்து பிரச்சோதன மன்னன் தன் பேரனுக்குக் கொடுத்தனுப்பிய பரிசிற் பொருள்களையும் பிறவற்றையும் யூகி உதயணனிடம் அளித்தான். பிரச்சோதன மன்னன் தன் மூலமாக உதயணனுக்குக் கூறியனுப்பிய செய்திகளையும் அவனிடம் சென்று விவரித்துக் கூறி விளக்கினான் யூகி.

உஞ்சை நகரத்திலிருந்து திரும்பி யூகி கோசாம்பி நகரத்துக்கு வந்து சேர்ந்த பின்னால், அரண்மனை வாழ்க்கையில் பழையபடி அமைதியும் இன்பமும் சூழ்ந்தன. துன்ப காலத்திலேதான் பொழுதும் காலமும் மெல்லக் கழிவன போலத் தோன்றும். இன்ப காலத்தில் களிப்பு என்னும் அமைதி நிறைந்த அந்த அனுபவத்தினால் காலம் வேகமாகக் கழிந்தாலும் அதை உணர்வதற்குத் தோற்றும் அவா எழுவது இல்லை. கூட உணர முடியாதபடி இத்தகையதொரு களிப்பின் அமைதிதான் பரவியிருந்தது.

78. நரவாணன் நாடிய நங்கை

கோசாம்பி நகரில் ஒவ்வொன்றாக ஆண்டுகள் கழிந்தன. ஆனால், காலத்தின் வளர்ச்சி என்பது அதன் சொந்த வளர்ச்சியாக மட்டுமா இருந்துவிடுகிறது? மனிதர்களையும் அவர்தம் எண்ணங்களையும் செயல்களையும்கூடக் காலம்தானே வளர்த்துக்கொண்டு போகவேண்டும்? உதயணன் முதலியவர்களுடைய புதல்வர்களும் இப்படித் தன் போக்கான கால வேகத்தில் வளர்ந்து வளர்ந்து இளமைப் பருவம் எய்தியிருந்தனர். உதயணனுடைய புதல்வனாகிய நரவாண தத்தனும், யூகி முதலிய மற்றத் தோழர்களின் புதல்வர்க