பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நரவாணன் நாடிய நங்கை

415

மென்று ஒரு பெரிய வீட்டின் நிலாமுற்றத்துச் சாளரத்திலிருந்து அழகிய பூம்பந்து ஒன்று அவனுடைய மெல்லிய மேலாடையில் வந்து விழுந்தது. மனத்தை மயக்கும் மோகனமும் இன்மணமும் மென்மையும் பொருந்திய அந்தப் பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு தலை நிமிர்ந்து, மேலே பந்து வந்து விழுந்த சாளரத்தை அண்ணாந்து பார்த்தான் நரவாணன். மேலே சாளரத்தை நோக்கி நிமிர்ந்த நரவாணனின் கண்கள் அங்கேயே நிலைத்துவிட்டன.

சாளரத்தின் வழியாகக் கீழே யானை மேலிருக்கும் அவனைப் பருகிவிடுவதுபோல நோக்கிக் கொண்டிருந்தாள் ஓர் அழகிய நங்கை. மாடத்தின் இடையே வெகு உயரத்தில் அமைந்திருந்த சாளரத்தில் தெரிந்த அந்த அழகு ததும்பும் மதிமுகம், நரவாணனுக்குத் தெளிவாக விளங்காவிடினும் மங்கலாகத் தென்பட்டது. அதுவும் ஒரே ஒரு கணந்தான்! அடுத்த கணம் வெட்கம் மேலிட்டதனாலோ, பயத்தினாலோ அந்த யுவதி அங்கிருந்து மறைந்துவிட்டாள். அவள் மறைந்த பின்பும் மயங்கிய மனத்தினனாய்த் தெரு, சூழ்நிலை முதலியவற்றையும் மறந்து, அதே சாளரத்தைச் சற்று நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நரவாணன். அவனது கையில் அதே மிருதுவான பூம்பந்து புரண்டதைப் போலவே, அவனுடைய நெஞ்சில் அவளைப் பற்றிய மென்மையான நினைவுகள் புரண்டன. சிறிது நேரம் அந்த மாளிகை, மாடம், சாளரம் முதலியவற்றைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, அருகிலிருந்த சோலை ஒன்றை அடைந்தான் அவன்.

சோலையில் இடவகன் மகனாகிய கோமுகனைச் சந்தித்தான். எடுப்பாக ஏறிவந்த யானையிலிருந்து இறங்கி, பந்தும் கையுமாகத் தன்னை நோக்கிவரும் நரவாணனை வியப்பு கலந்த நோக்குடனே கோமுகன் வரவேற்றான். நரவாணன் கோமுகனுக்கருகில் அமர்ந்து பந்தை, அவனுக்குக் காட்டி நடந்த நிகழ்ச்சி முழுவதையும் அவனிடம் விவரித்தான். கோமுகன் அதைக் கேட்டவுடன் நரவாணனைப் பார்த்து மென்முறுவல் பூத்தான். நரவாணன் தான் கொண்டுவந்திருந்த பந்தை, அப்போதே கோமுகனிடம்