பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

416

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

அளித்து அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களை அறிந்து வந்து தன்னிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். கோமுகன் அந்தப் பந்தைக் கையில் வாங்கிப் பார்த்தான். ‘அதைப் பிடித்து விளையாடிய இளம்பெண், அப்படி விளையாடியபோது கைகளில் ஈரச் சந்தனம் பூசிக் கொண்டிருந்தவளாயிருக்க வேண்டும்’ என்று அனுமானிக்க அதில் இடமிருந்தது. பந்தில் அதைப் பிடித்திருந்த சிறு விரல்களின் சந்தனக் கறை படிந்திருந்தது.

‘அந்தப் பந்தையும் அதன்மேல் படிந்திருக்கும் இளம்பெண் விரல்களின் சந்தனக் கறையையும் கொண்டே அதை விளையாடிய பெண் யார் என்பதைத் தேடிக் கண்டுபிடித்து விடலாம்’ என்ற நம்பிக்கை கோமுகனுக்கு ஏற்பட்டது. அந்தப் பந்துக்குரியவளைக் கண்டுபிடித்து விடலாமென்று நரவாணனுக்குக் கோமுகன் ஆறுதலும் உறுதியும் கூறினான். கோமுகனைச் சந்தித்து நரவாணன் தன்னிடம் இருந்த பந்தை அளித்து, அதற்குரியவளைக் கண்டுபிடித்துக் கூறுமாறு வேண்டிக் கொண்டு சென்றதிலிருந்து, கோமுகன் தனது சிந்தனை, செயல் இரண்டினாலும் அதே வேலையை மேற்கொண்டு அலைந்தான். இதன் பயனாக அந்தப் பந்தைப் பற்றிய பெரும்பான்மையான விவரங்களை அதற்குரிய இடத்தில் சென்று விசாரித்துக் கோமுகன் கண்டறிந்து கொள்ள முடிந்தது.

கோசாம்பி நகரத்துக் கணிகையர் தெரு, ‘கலைகளின் இருப்பிடம்’ என்று கூறுமாறு விளங்குவது. ஆடல், பாடல் முதலிய நுண்கலைகளையே வாழ்க்கையின் நிலையாகக் கொண்ட எண்ணற்ற பல கணிகையர் அங்கே வாழ்ந்து வந்தனர். அவர்களில் தலைமை சான்றவளாகவும் சிறப்பு மிக்கவளாகவும் விளங்கியவள் கலிங்கசேனை. அந்தக் கலிங்கசேனைக்கு ஒரு மகள் இருந்தாள். அழகுக்கென்றே படைப்புக் கடவுள் படைத்த பெண்ணாக இவளைக் கூறலாம். இவளுக்கு மதன மஞ்சிகை என்று பெயர். இவள் தன் வீட்டின் மேல்மாடத்திலுள்ள நிலாமுற்றத்தின் உள்ளே பந்து விளையாடிக் கொண்டிருந்தபோதுதான் கை தவறி