பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

418

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

பொருள்களுடன் மதனமஞ்சிகையின் தாயாகிய கலிங்கசேனையின் மாளிகையை நாடிச் சென்றான். கலிங்கசேனை கோமுகனை அன்போடும் பெருமதிப்போடும் வரவேற்றாள். கலிங்கசேனையிடம் பரிசுப் பொருள்களை அளித்து, மதன மஞ்சிகையின் பந்து தெருவிற் சென்று கொண்டிருந்த நரவாணன்மேல் விழுந்தது தொடங்கி, அவனுக்கு அவள் மேல் அளவற்ற காதல் ஏற்பட்டிருப்பதுவரை எல்லா விவரங்களையும் விளக்கமாகக் கூறினான் கோமுகன்.

“என் மகள் மதனமஞ்சிகையின்மேல் இந் நாட்டின் இளவரசராகிய நரவாண தத்தருக்குக் காதல் தோன்றியிருக்கிறது என்றால், அது எங்கள் வழிபடு தெய்வம் எங்களுக்கு நாங்கள் வேண்டாமலே தானாகக் கொடுத்த வரம் போன்றது ஆகும். என் மகள் மதனமஞ்சிகை முற்பிறவியில் புண்ணியத்தின் மிகுதி பெற்றவள் போலும். எனவேதான் மதன மஞ்சிகை நரவாண தத்தரை நாயகராக அடைகின்றாள்” என்று தன் மகிழ்வையும் இசைவையும் தெரிவித்தாள் கலிங்கசேனை. கோமுகனை அமரச் செய்துவிட்டுத் தன் உறவின் முறையைச் சேர்ந்தவர்களாகிய மற்ற கணிகையர்களையும் தனியாக ஒன்றுகூட்டி ‘நரவாணனுக்கு மதன மஞ்சிகையை அளிப்பது பற்றி அவர்கள் கருத்து யாது?’ என்பதையும் கலிங்கசேனை விசாரித்தாள்.

மதனமஞ்சிகையை நரவாணனுக்கு மணமுடித்துக் கொடுப்பதைப் பற்றி அவர்களில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லையானாலும், ‘நரவாணனின் தந்தையும் நாட்டின் பேரரசனுமாகிய உதயணனிடம் யாவற்றையும் தெரிவித்துக் கருத்து உடன்பாடு பெற்றுக் கொண்டாலொழிய இதை நாமாகச் செய்துவிடுவது நல்லதன்று’ என்ற புதிய தீர்மானத்தை அவர்கள் கலிங்க சேனைக்குக் கூறினார்கள். கலிங்கசேனைக்கும் அவர்கள் கூறிய படியே செய்வதுதான் சரியென்று தோன்றியது. அவள் உடனே அதை, கோமுகனிடம் வந்து கூறினாள். தான் கூறுவதைக் கேட்டுக் கோமுகன் சினமோ ஆத்திரமோ கொண்டு விடாதவாறு பணிந்த மென்மொழிகளால் இதை அவனிடத்திற் கூறினாள்