பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மதனமஞ்சிகை எங்கே?

421

மானசவேகன் என்ற விஞ்சையன் உருவத்திலே இனிமேல் வலைவிரிக்கப் போகிறது’ என்பதை அவர்கள் கண்டார்களில்லை! சோலைக்குள் மஞ்சிகை அங்குள்ள செய்குன்று ஒன்றின் அருகே நின்று அதனுடைய வனப்பை வியந்து கொண்டிருந்தாள். ஏறக்குறைய அதே நேரத்தில் பிறர் கண்ணுக்குப் புலப்படாத கரந்த உருவத்தோடு மானசவேகனும் அந்தச் சோலைக்கு வந்து சேர்ந்தான். செய்குன்றின் அருகே நின்று கொண்டிருந்த மதனமஞ்சிகை, மானசவேகனுடைய கண்களுக்கு ஒரு தேவகன்னிகை போலத் தென்பட்டாள். அவளுடைய வடிவழகு அவனை மிகுந்த மயக்கமுறச் செய்தது. அவன் நெஞ்சில் மோகப் பித்தம் முறுகி வளர்ந்தது. தன் ஆசைத் தீயை அவனால் தணித்துக் கொள்ள முடியவேயில்லை.

‘இப்படிப்பட்ட அழகி தேவருலகிலும் இல்லையே! இவளை அடைந்தால் அல்லவா வாழ்க்கையின் இன்பநோக்கு நிறைவேறும்’ என்று நினைத்தான் மானசவேகன். ‘மதனமஞ்சிகையை எவ்வாறேனும் தன்னோடு அபகரித்துச் சென்றுவிட வேண்டும்’ என்ற எண்ணமும் அவன் மனத்தில் உறுதியுற்றது. இந்த எண்ணத்தோடு சிறிது நேரம் அங்கேயே காத்திருந்தான் மானசவேகன். மதனமஞ்சிகையும் நரவாண தத்தனும் அந்தச் சோலையில் சில விளையாடல்களைப் புரிந்தபின் ஓரிடத்தில் களைப்பு மிகுதியால் படுத்திருந்தனர். படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஆழ்ந்த உறக்கம் அவர்களை ஆட்கொண்டு விட்டது. தங்களை மறந்து தூக்கத்தில் இருந்தனர் இருவரும். இந்த உறக்கநிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்பிய மானசவேகன், தன் மந்திர வலிமையினால் நரவாண தத்தனை இன்னும் ஆழ்ந்த உறக்கம் கொள்ளுமாறு செய்துவிட்டு, மதனமஞ்சிகை தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு விடாதபடி அவளை மெல்லத் தன் கைகளில் தூக்கிக்கொண்டு வான் நோக்கி எழுந்தான். மதனமஞ்சிகை மலர்ப் பந்துபோல அவன் கைகளில் இருந்தாள். ஏதும் அறியாதவனாய்க் கீழே உறங்கிக் கொண்டிருந்தான் நரவாணன். மானசவேகன்