பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேகவதியின் காதல்

423

அவனுடைய மொழிகளில் ஆவல் வெறியும் கெஞ்சுகின்ற பாவனையும் இருந்தன. மதனமஞ்சிகை தனக்கு விஞ்சையனால் நிகழ்ந்த வஞ்சகத்தை உணர்ந்தாள். தான் நரவாணனிட மிருந்து வலுவில் திருடிக் கொண்டு வரப் பெற்றதற்கும் அதுவே காரணம் என்றும் அவளுக்குப் புரிந்தது. தீயை மிதித்தவள் போலானாள் மதனமஞ்சிகை. பெண் புலியாக மாறினாள். மானசவேகனைக் காறித் துப்பிச் சீறினாள். அவளுடைய சினத்தையும் அளவற்ற ஆத்திரத்தையும் கண்டு மானசவேகனே பயந்து போனான்.

தன்னால் அவள் மனத்தை மாற்ற முடியாதென்றுணர்ந்த அவன், அழகும் சாமர்த்தியமான பேச்சுத் திறனும் வாய்ந்தவளாகிய தன் தங்கை வேகவதி என்பவளை அழைத்து, “மதனமஞ்சிகையை எப்படியாவது மனம் மாறும்படி முயன்று என் விருப்பத்திற்கு இணங்கச் செய்வது உன்பொறுப்பு” என்று கூறி அவளிடம் அனுப்பினான். வேகவதியின் திறமையில் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை. அவளும் அதற்குச் சம்மதித்து மதனமஞ்சிகையின் மனத்தை மாற்றுவதற்காக அவளிருந்த இடத்திற்குச் சென்றாள். வேகவதி மதனமஞ்சிகையை அடைந்து, அவளிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தாள். தன் பேச்சுத் திறமையை எல்லாம் பயன்படுத்தி, அவள் மனத்தை மாற்றுவதற்கு முயன்றாள். மானசவேகனுடையும் அழகையும் சிறப்பையும் வானளாவ வருணித்து, “இப்படிப்பட்ட கந்தர்வ வேந்தன் ஒருவனுடைய காதல் உனக்கு எளிமையாகக் கிடைக்கிறது என்றால் அதை ஏன் நீ கை நழுவ விடுகின்றாய்?” என்று தந்திரமாக ஆவலைக் கிளப்பிப் பார்த்தாள். ஆனால் எந்த ஒரு முயற்சியும் மதனமஞ்சிகையின் திடத்தை அசைக்க முடியவில்லை.

மதனமஞ்சிகை அணுக முடியாத நெருப்பாயிருந்தாள். அவள் மனத்தில் நரவாண தத்தனைப் பற்றிய ஒரே நினைவுதான் இருந்தது. வேகவதியின் முயற்சிகள் அவளிடம் சிறிதளவுகூடப் பலிக்கவே இல்லை. அம்முயற்சிகள் அவளுடைய கோபத்தை வளர்க்கவே பயன்பட்டன.