பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

424

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

“என் காதலர் நரவாண தத்தரைப்போல அழகிற் சிறந்தவர்கள் இந்த உலகம் முழுவதும் தேடினாலும் கிடைக்க மாட்டார்களே! அவருடைய கல்விக்கும் ஆண்மைக்கும் ஈடு இணை ஏது? என் உள்ளம் அவர் ஒருவருக்கே உரியது. அவரும் நானும் பூண்டிருக்கும் தெய்வ சாட்சியான இந்த அன்புரிமையை எங்களிடமிருந்து எவரும் பறிக்க முடியாது. பறிக்கவிட மாட்டேன். அதை மீறி வன்முறைகளால் பறிக்க முயன்றால் என் உயிரையாவது கொடுப்பதற்கு முயல்வேனே ஒழிய, அன்புரிமை களங்கமடையும்படி விடமாட்டேன்” என்று இப்படி மதன மஞ்சிகை உறுதியாகக் கூறியபோது, உண்மையில் வேகவதிக்கே மலைப்பு ஏற்பட்டுவிட்டது. அதோடு, ‘காதலுக்குரிய அழகு என்பது என்ன!’ என்று காணத் துடிதுடிக்கும் பருவம் அவளுக்கு. வேகவதி, நரவாண தத்தனைப் பற்றிக் கேள்விப்பட்ட இனிய செய்திகள், கன்னி கையான அவள் மனத்தில் இன்பத் தென்றலை வீசியது.

‘மானிடர்களில் மெய்யாகவே நரவாணனைப் போன்ற ஓர் அழகன் இருக்க முடியுமா? இருந்தால் நல்லதுதான்! அவனை என் போன்ற தேவகன்னிகள் அநுபவிக்கக் கொடுத்து வைத்திருக்குமானால் அது எங்களுக்கு எவ்வளவு பெரிய பாக்கியம்?’ என்று இத்தகைய இன்ப நினைவுகளால் நரவாணனைச் சென்று காணவேண்டும் என்ற ஆவல் வெள்ளம்போற் பெருகியது வேகவதியின் உள்ளத்தில். தேவ கன்னிகையான வேகவதி, தன்னை மறந்தாள். தான் தன்னுடைய தமையனிடம் ஒப்புக்கொண்டு வந்திருந்த செயலையும் மறந்துவிட்டாள். அதுவரை கண்டிராத நரவாண தத்தன் என்னும் மண்ணுலகத்து அழகரசன்மேல் மட்டுமே இலயித்து விட்டது அவள் உள்ளம். மதன மஞ்சிகை, தன் தமையனான மானசவேகன், ஆகியோர் எக்கேடு கேட்டால் என்ன? தான் நேரே கோசாம்பி நகரத்திற்குச் சென்று ‘தன் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட அந்த நரவாண தத்தனை ஒருமுறை ஆசைதிரத் தழுவினால் ஒழிய, தன் உள்ளத்து வெறி ஓயாது’ என்று அவளுக்குத் தோன்றியது. வேகவதி கோசாம்பி