பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேகவதியின் காதல்

425

நகருக்குப் புறப்பட்டுச் சென்றாள். போகும் போதே அவள், தன்னை மதனமஞ்சிகையின் தோற்றமுடையவளாக மாற்றிக் கொண்டாள்.

அது அவ்வாறிருக்க இங்கே கோசாம்பி நகரத்துச் சோலையில் தூக்கத்தினின்று விழித்த நரவாணன் அருகில் தன்னோடு துயின்று கொண்டிருந்த மதனமஞ்சிகையைக் காணாமல் திடுக்கிட்டான். கலங்கிய உள்ளத்தோடு அந்தச் சோலையில் ஒவ்வொரு பகுதிகளிலும் தேடத் தொடங்கினான். அலமந்த மனத்துடன் நரவாணன் இவ்வாறு சோலையில் சுற்றிக் கொண்டிருந்தபோதுதான், விஞ்சையர் உலகிலிருந்து வேகவதி மதனமஞ்சிகையின் உருவத்தோடு அந்தச் சோலையில் வந்து இறங்கினாள். மன்மதன் போன்ற நரவாண தத்தனின் தோற்றம் அவளைப் பித்துற்று மயங்கும்படி செய்தது. நரவாணன் தன்னை மதனமஞ்சிகை என்றே எண்ணிக் கொள்ளும்படியாக, அவளுருவத்துடனேயே அவனருகே சென்றாள் வேகவதி. அவளைக் கண்ட நரவாணன், அவளை மதனமஞ்சிகை என்றே எண்ணிக் கொண்டு, “மதன மஞ்சிகையே! இவ்வளவு நேரம் நீ எங்கே சென்றிருந்தாய்” என்று கேட்டவாறே ஓடிவந்து அவளைத் தழுவிக் கொண்டான்.

வேகவதி அவனுடைய அந்த மோகனமான தழுவலில் மதுவுண்டு களித்த வண்டுபோல மயங்கி நின்றாள். அவளுக்குச் சற்றே நாணமும் ஏற்பட்டது. அவள்தான் இதழ்களில் நாணம் நிறைந்த புன்னகையோடே தரையை நோக்கினாள். அவளுடைய அந்த நாணத்தைக் கண்ட நரவாணனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ‘இவள் என்னோடு நன்கு பழகிய மதன மஞ்சிகையானால் திடீரென இன்று புதுமையாக இவ்வளவு நாணம் கொள்ள மாட்டாளே!’ என்ற சந்தேகத்துடன் அவளை நிமிர்ந்து பார்த்தான் நரவாணன், வேகவதிக்கு அந்தக் கம்பீரமான பார்வையின் பொருள் புரிந்துவிட்டது. அவள் நரவாணனிடம் ஓர் உண்மையை ஒப்புக்கொண்டு தான் யார் என்பதையும் கூறிவிட்டாள்.