பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

426

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

ஆனால் மதனமஞ்சிகையைப் பற்றியோ அவளைத் தன் தமையன் மானசவேகன் தூக்கி வந்திருப்பதைப் பற்றியோ, அவள் அப்போது தன் தமையனிடம் இருப்பதைப் பற்றியோ எதுவுமே அவனிடம் கூறவில்லை.

நரவாணனும் அப்போது காமப்பரவசனான நிலையில் இருந்ததனால், மதனமஞ்சிகையைப் பற்றி விசாரிக்கவே தோன்றவில்லை அவனுக்கு! வேகவதியின் அழகும் புதுமை தவழும் கன்னிமை கனிந்த உடலும் சந்தேகத்தையும் மீறிய காமுகனாக அப்போது அவனை மாற்றிவிட்டன. அவன், அவள் வசத்தினனாய் மாறி அவளுடன் சரசமாடுவதே தன் செயலாக இருக்கலாயினான். வேகவதியும் அவன் இன்பத்தில் மிக்க விருப்பமுற்று, அவனுடனேயே கோசாம்பியில் தங்கியிருக்க முற்பட்டுவிட்டாள். முதலில் தோன்றிய சிறிது சந்தேகமும் இப்போது இல்லாமல் வேகவதியோடு நெருங்கிப் பழகத் தொடங்கி விட்டான் நரவாண தத்தன்.

வித்தியாதர லோகத்தில் மானசவேகன் தான் மதன மஞ்சிகையிடம் அனுப்பிய தன் தங்கை வேகவதியைக் காணாமல் சந்தேகங்கொண்டு தன்னுடைய மந்திர வலிமையினால், ‘அவள் அப்போது எங்கே இருக்கின்றள்’ என்பதை ஆராய்ந்து பார்த்தான். அவள் இருக்குமிடத்தைப் பற்றிய உண்மை அவனுக்குத் தெரியவந்தது. தான் கூறிய காரியத்தையும் தன்னையும் மறந்து வேகவதி கோசாம்பி நகரத்தில் நரவாண தத்தனுடனே இன்ப விளையாடல்களைப் புரிந்து கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்தபோது, அவள்மேல் அவனுக்குப் பெருங்கோபம் எழுந்தது. அடக்கமுடியாத அந்தக் கோபத்தில் தனக்கு மதனமஞ்சிகையின் மேலிருந்த ஆசையையும் மறந்து, தங்கையின்மேல் ஆத்திரத்தோடு கோசாம்பி நகரத்துக்குப் புறப்பட்டான் அவன்.

கோசாம்பிக்கு வந்து சோலையில் அவர்களைக் கண்ட அவன் மனம் பற்றி எரிந்தது. நரவாணனும் வேகவதியும் அப்போது இருந்த நிலையே அவன் மனத்தைக் கொதிக்கும் படி செய்தது. சோலையில் இருந்த வேகவதியையும்