பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

யினரான அந்த முனிவரிடம் பயபக்தியோடு விசாரித்தான் நரவாணன். “பறவைகள் வான் மார்க்கமாகப் பறந்து செல்வதற்குரியதுபோல மாந்தரும் பறந்து செல்வதற்குப் பயன்படக் கூடியதான ஓர் அரிய மந்திரம் உன் தந்தையாகிய உதயணனுக்குத் தெரியும். நீ கோசாம்பி நகரத்துக்குத் திரும்பிச் சென்று, அந்த மந்திரத்தை உன் தந்தையிடமிருந்து அறிந்துகொண்டால் திறமையைப் பயன்படுத்தி விஞ்சைய ருலகத்தையே வென்று வாழலாம்! இது உன் முற்பிறவிப் புண்ணியங்கள் உனக்கு விளைந்து கொண்டிருக்கின்ற காலம். உனக்கு எல்லாம் நலமாக முடியும்” என்று விளக்கி அவனுக்கு ஆசி கூறினார் அந்த முனிவர்.

முனிவர் சொற்படியே கோசாம்பிக்கு வந்து தந்தையிடம் அந்த மந்திரத்தை அறிந்து, சில நாள் தன் பெற்றோர்களோடு தங்கியிருந்தபின் விடைபெற்றுக் கொண்டு விஞ்சையருலகிற்குக் கிளம்பினான் நரவாணன். விசயார்த்தம் என்ற மலைத்தொடரின் தென்புறத்திலுள்ள ஸ்ரீதரம் என்ற நகரம் முதலில் குறுக்கிட்டது. அந்த நகரின் கோட்டை வாயிலில் சில நாழிகைகள் தங்கினான் அவன். சதானிக முனிவர் சொல்லியனுப்பியது போல நரவாணனுக்கு அது புண்ணியம் விளைகின்ற காலமாகையினால், கந்தருவபுரத்து மன்னானகிய நீலவேகன் என்பவனின் தூதுவன் தானாகவே வலுவில் வந்து “தங்களை எங்கள் மன்னன் அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்” என்று நரவாணனை உடனழைத்துப் போனான். நரவாணன், கந்தருவபுரத்து மன்னனாகிய நீலவேகனைச் சென்று சந்தித்தான். “என் புதல்வியாகிய அநங்க விலாசினி ஒருநாள் துயிலும்போது மண்ணுலகிலிருந்து சிங்கக் குருளை போன்ற ஆடவன் ஒருவன் வந்து தனக்கு மாலை சூட்டுவதாகக் கனவு கண்டாள். அவனை யான் ஒரு முனிவரிடம் சென்று கூறி அக் கனவின் உட்பொருளை விளக்குமாறு வேண்டிக்கொண்டேன். அவர், ‘மண்ணுலகத்தில் உதயணனுக்கு மகனாகப் பிறந்த அரசகுமாரன் வந்து உன் புதல்வியை மணந்து கொள்வான்’ என்று அந்தக் கனவின் பயனை விவரித்தார். அன்புடனே என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, என்