பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புண்ணிய விளைவுகள்

431

அந்த அறவுரையைக் கேட்டுக் கோபம் நீங்கித் தன் பாவச் செயல்களுக்கு அஞ்சிக் கண்ணிரை உகுத்துக்கொண்டு யாதொரு கொடுஞ்செயலும் இன்றித் திரும்பி அரண்மனை வாயிலில் வந்து நின்றது.

யானை வந்து அடங்கி நிற்பதை வாயிற் காவலர் அரசனுக்குத் தெரிவிக்க, அவன் வந்து பார்த்து வியப்புற்று நின்றனன். அப்போது யூகி, “ஏதோ அறவுரையைக் கேட்டு இது பக்குவமுற்று அடங்கி நிற்கிறது போலும்; இனி ஊர்ந்து செல்வதற்கு இது தகுதியுள்ளது” என்றனன். உதயணன் அதன் பிடரியில் ஏறியபொழுது யானை அவனை மிக்க விருப்பத்துடன் தாங்கிக்கொண்டு சென்று மேற்கூறிய வனத்தை அடைந்து நின்றது. அரசன் அவ் வனத்தில் பெரியோர் பலர் வந்திருத்தலை அறிந்து இறங்கி வழிபாட்டுடன் சென்று தருமவீர முனிவரை வணங்க, அவர் அவனுக்கு ஒர் இருக்கையை அளித்துத் தருமோபதேசம் செய்தார்.

அதனைக் கேட்ட உதயணன் இன்புற்று, “இந்த யானையின் பண்டை வரலாறு என்ன?” என்று அவரிடமே கேட்க, அவர், “சாலி என்பதொரு நாட்டில் கடகம் என்பதோர் ஊரிலுள்ள இடபகன் என்பவனும் அவன் மனைவி சாலி என்பவளும் இல்லறம் நடத்திக்கொண்டு வருகையில், அவன் பண்டைப் பாவ வசத்தால் அமரிகை என்னும் ஒரு கணிகை வயப்பட்டவனாய்க் குல ஒழுக்கத்தை விட்டுவிட்டு, மிக்க பாவத் தொழில்களைச் செய்வானாயினன். இறந்த பின்பு அவனே இந்த யானைப் பிறப்பை அடைந்தனன். அதனால்தான் இந்த யானை தருமங்களைக் கேட்டவுடன் தன் கொடுஞ் செயல்களைத் துறந்து அடங்கி நிற்கின்றது” என்றனர். இதைக் கேட்ட உதயணன் அதை நன்கு பாதுகாக்கும்படி பாகர்களுக்குக் கட்டளை இட்டு அதன் பக்கத்தை அடைந்து, “யானை அரசே! உனக்கு யான் செய்வித்த துன்பங்களைப் பொறுத்துக் கொள்” என்று சொல்லி அதனை அன்புடன் தன் கைகளால் தடவிக் கொடுத்துத் தன்னிடத்தை