பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

 தொடங்கினாள். தன் காதலியும் தன்னைப் போலவே பிரிவுத் துயரால் வாடுகிறாள் என்பதை அறிவது, அன்புலகில் ஒரு திருப்தியாகுமல்லவா? அது தெரிந்த செவிலி, உதயணன் உள்ளத்திற்கு அந்தத் திருப்தியை அளிக்க இதைத் தக்க இடத்தில் தக்க நேரத்தில் கூறவேண்டியவள் ஆகிறாள். “வேற்றரசர் மணத் தூது விடுத்தார்களென்றறிந்து தன் தந்தையோடு முனிவு கொண்டிருக்கிறாள் நின் தத்தை! நீ மணந்தால் வாழ்வு, கூடாதேல் சாவு இந்த முடிவிற்கு வந்துவிட்டாள் அவள். ‘பிற அரசர் மணத் துது விட்டமையால் அவருள் சிறந்த பேரரசன் ஒருவனுக்கு நுந்தை நின்னை அளிப்பார்’ என்றேன். அதைக் கேட்ட வாசவதத்தை நடுங்கித் துயருற்றாள். காவலாட்டியர் நாவிலெழுந்த விளையாட்டுப் பேச்சுகளையும் அவ்வாறே வேம்பென வெறுத்தாள். ‘தன் மேல் ஐயுற்ற இராமன் இரங்கி வருந்தும் படியாக மண்மகளே இடந்தா என வேண்டி உள்ளே மறைந்த சீதைபோல யானும் செய்வேன்’ என்கிறாள். நீ பிரிய நேர்ந்தால் அவள் நெஞ்சு பொறுக்காது; அது நீறுபூத்துவிடும்” என்றிவ்வாறு தத்தையின் நிலையை உதயணனுக்குச் செவிலி விளக்கினாள்.

சாங்கியத் தாய் உதயணன் உள்ளத்துக்குத் திருப்தியை அளித்தாள். அதே பொருளைத் தத்தைக்காக அவனிடமிருந்தும் பெற்றுக் கொண்டாள். விடை பெற்றுச் சென்றாள். தனியே நின்ற உதயணனிடம் காஞ்சனமாலை வந்து, “இன்று யாழ் கற்கும் நேரம் கழிந்தது, நீங்கள் சென்று வரலாம்” என்று கூறிவிட்டுப் போனாள்.

உதயணன் அவளிடம் தத்தை அன்று செய்ய வேண்டிய யாழ்ப் பயிற்சி முறைகளை விவரித்து விட்டுச் சென்றான். இளவரசர்கள் யாவரும் தத்தம் கலைத் துறையிற் தேர்ந்தனராகையால் விரைவில் அரங்கேற்றம் நடைபெறும். அப்போது வாசவதத்தையின் யாழ் அரங்கேற்றமும் நடைபெறுமென்று அறிந்தே உதயணன் இவ்வாறு கூறினான். காஞ்சனமாலை கன்னிமாடம் நோக்கி நடந்தாள். உதயணன் தன் மாளிகைக்குத் திரும்பினான்.