பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

 முள்ள நம் நாடுவரை ஓடாதாயினும், நானூறு காதமாவது நிச்சயமாகச் செல்லும். அதற்குப் பின்பு பிடி வீழ்ந்திடினும் கவலை இல்லை. குறும்பரும் வேடர்களும் நிறைந்த எஞ்சிய நாட்டுப்புற வழியில் நமக்குத் துன்பம் நேருமாயினும் அவற்றை ஒருவாறு நீக்கி நாடு சென்றடைய முடியும். இவற்றை நீ உறுதியாகச் செய்து வெற்றிபெற வேண்டு மென்று யூகி உன்பாற் கூறும்படி சொன்னான். நின் வெற்றியை எதிர் நோக்கியே யூகி இத் திட்டங்களை வகுத்துள்ளான்” என்று வயந்தகன் கூறி முடித்தான். உதயணன் ஆழ்ந்து சிந்தனை செய்தபின் தலைநிமிர்ந்து வயந்தகனை நோக்கினான். “யானும் யூகியும் தீதில்லாது உயிர் வாழும்வரை வெற்றிக்கு அழிவே இல்லை. வானக மாயினும் அடிபணியச் செய்வோம். அவ்வாறிருக்க இஃது என்ன பெரிய செயல்? இதை எளிதில் வெற்றி கொள்ளலாம்” என்று கூறி, ஒர் குறுநகை புரிந்தான் உதயணன். வயந்தகன் விடை பெற்று மீண்டும் உடனே வருவதாகக் கூறிவிட்டுச் சென்றான்.

நீராட்டுவிழா அழகை விரும்பிப் பார்ப்பவன் போலத் தத்தை நீராடும் துறைக்கு மிகவும் அண்மையில் அகலாமலும் அணுகாமலும் பத்திராபதியின்மேல் வந்து நின்று கொண்டான் உதயணன். அப்போது காற்றும் மழையுமாகத் திடீரென்று பெரிய புயலொன்று வீச ஆரம்பித்தது. மறைந்து ஓரிடத்தே இருந்த யூகி அங்கே புயலெழுந்தது கண்டு கனவில் வந்த செல்வத்தை நனவிற் பெற்றாற் போன்ற மகிழ்ச்சியுடன், தமர் அறியக் குறிப்பாகப் பெரு முரசு ஒன்றைக் கொட்டினான். யூகி முரசு கொட்டியதும் அங்கங்கே ஒளிந்திருந்த வீரர்கள் ‘உதயணன் வாழ்க! என்ற ஆரவாரத்துடன் எழுந்தனர். அதே சமயத்தில் நகருள் யூகியால் ஏவப்பட்ட கள்ள மகளிர் ஊருக்குத் தீயிட்டனர். எங்கும் எழுந்தது பெருந்தீ. மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. குழந்தைகளும் முதியோரும் கன்று கறவைகளுமாக நகரில் பலர் தீக்கிரையாகி விடுவார்களே என்று கவலைப்பட்டு